விழுப்புரத்தில் : ஆசிரியையிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு - 4 முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
விழுப்புரத்தில் ஆசிரியையிடம் கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்துச்சென்ற 4 முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் சாலாமேடு அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). இவர் அனந்தபுரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ராஜலட்சுமி(45). இவர், கல்யாணம்பூண்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் தங்கள் வீட்டை பூட்டிவிட்டு திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று விட்டனர். இதையறிந்த முகமூடி கொள்ளையர்கள் 4 பேர் ஒரு காரில் நள்ளிரவு 1 மணியளவில் நாகராஜ் வீட்டின் அருகில் வந்துள்ளனர்.
இவர்களில் 2 பேர் காரில் அமர்ந்திருக்க மற்ற 2 கொள்ளையர்கள், நாகராஜ் வீட்டின் பின்பக்க கதவு தாழ்பாளை நெம்பி திறந்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 750 கிராம் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்தனர்.
மேலும் வீட்டில் ஏதேனும் நகைகள், பணம் இருக்கிறதா? என்று தேடிப்பார்த்தனர். அந்த சமயத்தில் திருவண்ணாமலையில் இருந்து நாகராஜ், ராஜலட்சுமி ஆகிய இருவரும் வீடு திரும்பினர். இவர்கள் தங்கள் வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றனர்.
அப்போது அங்கு முகமூடி கொள்ளையர்கள் இருந்ததை பார்த்ததும் இருவரும் திருடன்... திருடன்... என கூச்சலிட்டனர். உடனே அந்த கொள்ளையர்கள், ராஜலட்சுமியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஏற்கனவே காரில் இருந்த 2 பேருடன் அவர்களும் காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். கொள்ளைபோன தங்க நகை மற்றும் வெள்ளிப்பொருட்களின் மதிப்பு ரூ.1½ லட்சமாகும்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்கள் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story