பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் ஓசூர், தர்மபுரியில் நடந்தது


பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் ஓசூர், தர்மபுரியில் நடந்தது
x
தினத்தந்தி 6 Dec 2018 10:00 PM GMT (Updated: 6 Dec 2018 6:13 PM GMT)

ஓசூர், தர்மபுரியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஓசூர்,

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பாபர் மசூதி இடிப்பை கண்டித்தும், பாபர் மசூதி கட்ட வலியுறுத்தியும் ஓசூரில் நேற்று அக்கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட த.மு.மு.க. தலைவர் ஏஜாஸ் கான் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கலீல் பாஷா, பொருளாளர் ஜூபைர், மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட த.மு.மு.க. செயலாளர் சான் பாஷா வரவேற்று பேசினார்.

இதில், தலைமை கழக பேச்சாளர் கோவை ஜைனுலாப்தீன் கலந்து கொண்டு பேசினார். மேலும், த.மு.மு.க. ஊடக பிரிவின் மாநில செயலாளர் அல்தாப் அகமது, ஓசூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் மாதேஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓசூர் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஆதில் ஆகியோர் பேசினார்கள். மேலும் இதில், மகபூப் ஷெரீப,் முத்தலீப், ரபிக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், ஓசூர் நகர த.மு.மு.க. தலைவர் அப்துல்லா ஷெரீப் நன்றி கூறினார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தென்றல் யாசின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நவாப்ஜான் வரவேற்றார். கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அமீன் கண்டனம் தெரிவித்து பேசினார்.

காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு, திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன், மாவட்ட தலைவர் இளையமாதன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தேவராஜன், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மண்டல பொறுப்பாளர் நந்தன், மாவட்ட செயலாளர் ஜெயந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் கருப்பு சட்டை அணிந்து திரளாக கலந்து கொண்டு பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை கண்டித்தும் இந்த விவகாரத்தில் உரிய நீதி வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

முடிவில் கட்சியின் மாவட்ட மருத்துவரணி செயலாளர் முனவர் நன்றி கூறினார்.

Next Story