மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே; ரெயில் பஸ் சோதனை ஓட்டம் வெற்றி


மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே; ரெயில் பஸ் சோதனை ஓட்டம் வெற்றி
x
தினத்தந்தி 6 Dec 2018 10:00 PM GMT (Updated: 2018-12-06T23:45:42+05:30)

மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே ரெயில் பஸ் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது.

குன்னூர்,

மலைப்பிரதேசமான நீலகிரி, மிகச்சிறந்த சுற்றுலா மாவட்டமாக விளங்குகிறது. இங்கு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலைரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்று, இயற்கை அழகை ரசித்து வருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி என்ஜின் மூலமாகவும், குன்னூர்- ஊட்டி இடையே டீசல் என்ஜின் மூலமாகவும் மலைரெயில் இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க மலைரெயில் சேவையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதன் ஒரு பகுதியாக குன்னூர்- ஊட்டி இடையே ரெயில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ரெயில் பஸ் மேட்டுப்பாளையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டி வரை ரெயில் பஸ் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி காலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து சோதனை ஓட்டம் தொடங்கியது. ஆனால் நீராவி என்ஜின் மூலம் இயக்கப்பட்ட ரெயில் பஸ் கல்லாறு வரை மட்டுமே சென்றது. அதன்பிறகு அங்கிருந்து மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு திரும்ப இயக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு ரெயில் பஸ் சோதனை ஓட்டம் தொடங்கியது. ரெயில் பஸ்சுடன் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டு, நீராவி என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது. அதில் மதியம் 1.15 மணிக்கு ரெயில் பஸ் குன்னூருக்கு வெற்றிகரமாக வந்து சேர்ந்தது.

முன்னதாக மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே உள்ள மலைக்குகைகளில் ரெயில் பஸ் உரசுமா? என்பதையும், மலைரெயில் பாதையில் ரெயில் பஸ் எவ்வாறு செல்கிறது? என்பதும் ஆய்வு செய்யப்பட்டது. அதன்பிறகு குன்னூரில் இருந்து ஊட்டிக்கு டீசல் என்ஜின் மூலம் ரெயில் பஸ் சோதனை ஓட்டம் நடந்தது. இதுவும் வெற்றி பெற்றது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரி ரீட்டா சவுத்ரி கூறும்போது, மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே ரெயில் பஸ் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்த ரெயில் பஸ் திருச்சி பொன்மலை பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சீரமைத்து மீண்டும் மேட்டுபாளையத்துக்கு கொண்டு வரப்படும். அதன்பின்னர் குன்னூர்- ஊட்டி இடையே ரெயில் பஸ் விரைவில் சேவை தொடங்கும் என்றார்.


Next Story