ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக: பெண்ணை மிரட்டியவருக்கு 3 ஆண்டு சிறை
ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக பெண்ணை மிரட்டியவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கோவை,
ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 42) இவர் கோவையில் பணியாற்றி வந்த உறவுக்கார பெண்ணிடம் பழகி வந்தார். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ந் தேதி காலை 9 மணியளவில் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பஸ்சுக்காக காத்து நின்ற அந்த பெண்ணை தன்னுடன் மோட்டார் சைக்கிளில் வருமாறு ஸ்ரீகுமார் வற்புறுத்தினார்.
ஆனால் அந்த பெண் மோட்டார் சைக்கிளில் ஏற மறுத்ததால் தனது செல்போனை காட்டி என்னுடன் வரமறுத்தால் எனது செல்போனில் வைத்துள்ள உன்னுடைய ஆபாச படங்களை முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீகுமாரை பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை 3-ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்புக் கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீகுமாருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. மேலும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 9 மாதங்கள் மெய்க்காவல் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு வேலுசாமி தீர்ப்புக்கூறினார். மாஜிஸ்திரேட்டு தனது தீர்ப்பில் கூறுகையில், ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கருணை காட்டி குறைந்த தண்டனை மற்றும் அபராதம் விதித்தால் நீதிமன்றத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார்கள். எனவே தான் இது போன்ற தண்டனை விதித்தால் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்பதற்காகவே கடுமையான சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக’ தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story