மாநகராட்சியை கண்டித்து தி.மு.க. சார்பில் போராட்டம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. அறிக்கை


மாநகராட்சியை கண்டித்து தி.மு.க. சார்பில் போராட்டம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. அறிக்கை
x
தினத்தந்தி 7 Dec 2018 3:15 AM IST (Updated: 7 Dec 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

குப்பை சேகரிப்பு மையம்

கடந்த காலங்களில் நகரின் மையப் பகுதியில் இருந்த குப்பை சேகரிக்கும் மையம், உரம் தயாரிக்கும் மையம் அனைத்தும் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப தி.மு.க. ஆட்சியில் நகருக்கு உள்ளே இருந்து அகற்றப்பட்டு நகருக்கு வெளியே தருவைக்குளத்தில் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது மாநகராட்சி நிர்வாகம் குப்பை சேகரிக்கும் மையம், உரம் தயாரிக்கும் மையம் என அனைத்தையும் மக்கள் குடியிருப்புக்கு அருகே அமைத்து உள்ளனர். தருவை மைதானம் அருகே உள்ள மீனவர்் காலனியில் உரம் தயாரிக்கும் மையம் அமைத்து மக்கள் குடியிருக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சுகாதாரமான சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை வைத்த போதும் இடையில் தொடரப்பட்ட பணி இன்றும் முழுமையாக முடிக்கப்படவில்லை. கழிவுநீர் கால்வாய் மண் மேடாகி நகர் முழுவதும் கழிவு நீர் சாலையில் வந்து சுகாதார கேடாக உள்ளது.

குடிநீர்

4-வது குடிநீர் குழாய் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு ஆண்டு முடிந்த பிறகும் புறநகரில் பல இடங்களில் புதிய இணைப்பு தரப்படவில்லை. புதிய இணைப்பு வழங்கப்பட்ட இடங்களிலும் சீராக குடிநீர் கிடைக்கவில்லை. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இந்த திட்டத்தை சீரமைத்து குடிநீர் வழங்க முன்வரவில்லை.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் பரிந்துரைக்கப்பட்ட பணிகளுக்கு உடனடியாக அனுமதி வழங்காமலும், ரேஷன் கடை கட்டுவதற்கு மாநகராட்சி இடம் வழங்கவும் மறுத்து வருகிறது.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அரசு வகுத்துள்ள விதிமுறைகளுக்குள் உள்ளதா? என்பதை மாவட்ட கலெக்டர் சரிபார்த்து அனுமதி வழங்குகிறார். ஆனால் மாநகராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்யும் பணிகளை நிறைவேற்றுவது இல்லை.

சிறிய அளவிலான கழிவு நீர் அகற்றும் வண்டிகள் சிறிய சந்துகள் உள்ள பகுதிகளில் கழிவுநீர் எடுத்து வந்தது. அந்த வண்டிகள் பழுதடைந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் சரிசெய்யப்படவில்லை.

இதனால் சிறிய சந்துகளில் கழிவுநீர் அகற்றப்படுவது இல்லை. முத்தையாபுரம் பகுதியில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையே தொடர்கிறது. மாநகராட்சியில் 6 மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட தற்காலிக சுகாதார வளாகம் எல்லாம் பராமரிப்பின்றி மக்கள் உபயோகிக்க முடியாமல் கிடக்கிறது.

வரி உயர்வு

மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பில் இல்லாத போது ஏற்கனவே ஒருமுறை வரி உயர்த்தப்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் தற்போது மீண்டும் வீடுகளுக்கும், வணிக வளாகங்களுக்குமான வரியை உயர்த்திட நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வரி(தீர்வை) உயர்த்துவதை வன்மையாக கண்டிக்கிறோம். மாநகராட்சி அதை கைவிட வேண்டும். அதே போல் தூத்துக்குடி மாநகராட்சியில் கட்டிட அனுமதி, புதிய தீர்வை வழங்குதல் புதிய வீட்டு எண் வழங்குதல் போன்ற பணிகளிலும் தேவையற்ற காலதாமதம் ஆகிறது.

போராட்டம்

மேலும் மாநகராட்சி நிர்வாகம் தற்போது பழைய பஸ் நிலைய கடைகள் அகற்றப்படும் என்று அறிவித்து உள்ளது. பல ஆண்டுகளாக கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளுக்கு கடைகள் அகற்றப்பட்ட அதே இடத்தில் தரைத்தளத்தில் கடைகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கடை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். சிறு, குறு வியாபாரிகளை ஒடுக்கும் எண்ணத்தில், அவர்களது பிழைப்பை கெடுக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் நடந்து கொண்டால் பொதுமக்கள் ஆதரவு, ஒத்துழைப்பு தரமாட்டார்கள். மாநகராட்சியில் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய் தேவைப்படும் இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே மாநகராட்சியின் பொதுமக்களுக்கு எதிரான ஒட்டு மொத்த நிர்வாக சீர்கேட்டை எதிர்த்து தி.மு.க. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story