புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கால்நடை மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை ஆவின் தலைவர் என்.சின்னத்துரை வழங்கினார்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கால்நடை மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை ஆவின் தலைவர் என்.சின்னத்துரை வழங்கினார்.
தூத்துக்குடி,
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கால்நடை மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை ஆவின் தலைவர் என்.சின்னத்துரை வழங்கினார்.
பணிநியமன ஆணை
நெல்லை- தூத்துக்குடி மாவட்ட பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் நலன் கருதி கால்நடை மருத்துவப் பணிகளை கடந்த மாதம் ஆவின் தலைவர் என்.சின்னத்துரை ஆய்வு செய்து கால்நடை மருத்துவப்பணிகள் முழு வீச்சில் நடைபெற அறிவுறுத்தினார். அதன் தொடர்ச்சியாக தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் 2018-19-ன் உள் திட்டமான தொழுவத்திலேயே கால்நடை மருத்துவம் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு திட்டத்தின் கீழ் புதிதாக 10 கால்நடை மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நெல்லை ஆவின் அலுவலகத்தில் நடந்தது. அங்கு 10 கால்நடை மருத்துவர்களுக்கும் பணி நியமன ஆணைகளை ஆவின் தலைவர் வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கால்நடை மருத்துவர்கள் நெல்லை, வள்ளியூர், நாங்குனேரி, ஆலங்குளம், சங்கரன்கோவில், சாத்தான்குளம், செக்காரக்குடி, கயத்தாறு மற்றும் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள 342 பால் கூட்டுறவு சங்கங்களுக்கும் கால்நடை மருத்துவப் பணிகள் தொய்வின்றி நடைபெற போதுமான மருத்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கி இந்த பணிகள் சிறப்பாக நடைபெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவசர சிகிச்சைகள்
பணி நியமனம் செய்யப்பட்டுள்ள கால்நடை மருத்துவர்கள் மூலம் பால் உற்பத்தியாளர்களின் இல்லங்களுக்குச் சென்று கால்நடை மருத்துவ சிகிச்சைகள், செயற்கை முறை கருவூட்டல் பணிகள் மற்றும் அவசர சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் கால்நடை வளர்ப்பு மேலாண்மை பயிற்சி, தூய பால் உற்பத்தி பயிற்சி, சமச்சீர் தீவனத்திட்டம் மற்றும் பல்வேறு தீவனப்பயிர்களான அசோலா, மண்ணில்லா பசுந்தீவனம் வளர்ப்பு முறைகள், கால்நடை வளர்ப்பில் தாதுஉப்பின் முக்கியத்துவம், கலப்புத்தீவனம் வழங்கும் முறைகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகளை இந்த மருத்துவர்கள் வழங்குவர்.
மேலும் சங்கப்பணியாளர்களுக்கு செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி வழங்கி சரியான நேரத்தில் செயற்கை முறை கருவூட்டல் செய்யவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஒன்றிய பால் உற்பத்தி 72 ஆயிரம் லிட்டரில் இருந்து ஒரு லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story