காதலி பேச மறுத்ததால் விபரீதம்: என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான தகவல்கள்


காதலி பேச மறுத்ததால் விபரீதம்: என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான தகவல்கள்
x
தினத்தந்தி 7 Dec 2018 3:30 AM IST (Updated: 7 Dec 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே காதலி பேச மறுத்ததால் மனமுடைந்த என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விளாத்திகுளம், 

விளாத்திகுளம் அருகே காதலி பேச மறுத்ததால் மனமுடைந்த என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூக்கில் பிணம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கே.தங்கம்மாள்புரம் காட்டு பகுதியில் ஒரு பாழடைந்த கட்டிடம் உள்ளது. இங்கு நேற்று காலையில் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, சூரங்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவரின் சட்டைப் பையில் இருந்த செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உருக்கமான தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

என்ஜினீயரிங் மாணவர்

ராமநாதபுரம் மாவட்டம் குருவாடி அருகே அவத்தாண்டை பகுதியைச் சேர்ந்த முத்திருளன் மகன் புகழேந்தி ராஜா (வயது 24). இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.இ. இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த உறவினரின் மகளை காதலித்து வந்தார்.

இதற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பெண் கடந்த சில நாட்களாக அவரிடம் பேசவில்லை. காதலி பேச மறுத்ததால் மனமுடைந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.

காதலியின் தோழிக்கு...

இதையடுத்து அவரை விளாத்திகுளம் அருகே கலைஞானபுரத்தில் உள்ள அவருடைய சித்தியின் வீட்டுக்கு அழைத்து சென்றனர். கடந்த மாதம் 28-ந்தேதி புகழேந்தி ராஜா, தனது சித்தியின் வீட்டில் இருந்து வெளியே சென்று மாயமானார். பின்னர் அவர், தன்னுடைய அண்ணன் முனியசாமியிடம் செல்போனில் பேசுகையில், உலகில் வாழ பிடிக்கவில்லை, எனவே தற்கொலை செய்து கொள்வதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்தார். இதுகுறித்து முனியசாமி, பெருநாழி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

இதற்கிடையே அவர் பக்கத்து ஊரான கே.தங்கம்மாள்புரம் காட்டு பகுதியில் இருந்த பாழடைந்த வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டியவாறு செல்போனில் புகைப்படம் எடுத்து தன்னுடைய காதலியின் தோழிக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைத்தார். பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

காதலி பேச மறுத்ததால், என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story