சேலத்தில் நாய் கடித்த சிறுவனுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை
சேலத்தில் நாய் கடித்த சிறுவனுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
சேலம்,
சேலம் நெத்திமேடு குமரக் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் விமல், தங்க நகை ஆசாரி. இவருடைய மகன் தக்ஷாந்த் (வயது 4). இவன் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறான். இவன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது தெருநாய் ஒன்று சிறுவனை கடித்து குதறியது.அவனுடைய அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்து சிறுவனை மீட்டனர். பின்னர் அவர்கள், நாய் கடித்ததில் கன்னம், உதடு மற்றும் கண் பகுதியில் பலத்த காயம் அடைந்த தக்ஷாந்தை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் ராஜேந்திரன் கூறியதாவது:- நாய் கடித்த சிறுவனை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது சிறுவன் நலமாக உள்ளான். சிறிய காயங்களுக்கு தையல் போடப்பட்டுள்ளது. மேலும் முகத்தில் உள்ள பெரிய காயங்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து உள்ளோம்.
இந்த அறுவை சிகிச்சை செய்ய இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகும். சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் நாய்க்கடிக்காக மட்டும் 130 பேர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story