மாவட்ட செய்திகள்

மதுரை அருகே பட்டப்பகலில் துணிகரம்:டாக்டர் வீட்டில் துப்பாக்கி முனையில் ரூ.5 லட்சம் கொள்ளைமுகமூடி கும்பல் கைவரிசை + "||" + The dresser in Madras near Madurai: Rs 5 lakh robbery at doctor's gun Masked gang mongering

மதுரை அருகே பட்டப்பகலில் துணிகரம்:டாக்டர் வீட்டில் துப்பாக்கி முனையில் ரூ.5 லட்சம் கொள்ளைமுகமூடி கும்பல் கைவரிசை

மதுரை அருகே பட்டப்பகலில் துணிகரம்:டாக்டர் வீட்டில் துப்பாக்கி முனையில் ரூ.5 லட்சம் கொள்ளைமுகமூடி கும்பல் கைவரிசை
மதுரை அருகே பட்டப்பகலில் டாக்டர் வீட்டினுள் புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.5 லட்சத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூர் காந்திஜி பூங்கா சாலையை சேர்ந்தவர் பாஸ்கரன்(வயது 67). டாக்டரான இவர், நேற்று காலை நடைப்பயிற்சி சென்றிருந்தார். வீட்டில் அவருடைய மனைவி மீரா(62), வேலைக்கார பெண் சாந்தி, காவலாளி பொன்ன வீராவி ஆகியோர் இருந்தனர்.

இந்தநிலையில் பாஸ்கரன் வெளியே சென்றதை நோட்டமிட்ட முகமூடி அணிந்த 6 பேர் கும்பல் 2 குழுவாக பிரிந்து முன்பக்க கதவு மற்றும் பின்பக்க கதவுகள் வழியாக திடீரென ஒரே நேரத்தில் அவரது வீட்டினுள் புகுந்தனர்.

பின்னர் அந்த நபர்கள் துப்பாக்கி மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி நகை, பணத்தை கேட்டுள்ளனர். பின்னர் அந்த கும்பல் வீட்டினுள் பீரோவில் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இத்தனையும் ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்தன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மீரா தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். மேலூர் போலீஸ் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர தடயவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் தடயங்களை சேகரித்தனர். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், மாவட்ட சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் கொள்ளை நடந்த டாக்டர் வீட்டில் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக டாக்டரின் மனைவி மீரா கூறும்போது, வழக்கம்போல் வீட்டில் பணிகளை செய்து கொண்டிருந்தபோது 6 பேர் திடீரென்று வீட்டினுள் புகுந்தனர். அப்போது அவர்கள் துப்பாக்கி, ஆயுதங்களை காட்டி பணத்தை கொடுக்க வேண்டும், இல்லையென்றால் சுட்டு விடுவோம் என்று மிரட்டினர். பின்னர் அவர்கள் வீட்டினுள் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு ஓடிவிட்டனர், என்றார்.

போலீஸ் தரப்பில் கூறுகையில், கொள்ளை நடந்த வீட்டில் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற சில தடயங்கள் கிடைத்துள்ளன. இதன்மூலம் கைவரிசை காட்டிய கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 தனிப்படை அமைத்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறோம். மேலும் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆராய்ந்து வருகிறோம், என்றனர்.

மதுரை மேலூரில் உள்ள காந்திஜி பூங்கா சாலையில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். இந்தநிலையில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.