காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ரூ.5 கோடியில் படகுகள் நிறுத்தும் இடம் அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார்
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ரூ.5 கோடியில் புதிய மீன்பிடி படகுகள் நிறுத்தும் இடத்துக்காக அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார்.
திருவொற்றியூர்,
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் 1984-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு 575 மீன்பிடி படகுகள் வந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது இந்த பகுதியில் இருந்து 2 ஆயிரம் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதால் மீன்பிடி படகுகளை நிறுத்தி வைக்க இடம் இல்லாமல் இருந்தது.
மேலும் படகுகள் நிறுத்தும் இடத்தில் இருந்து மீன்கள் ஏலம் விடும் இடம் தொலைவில் இருப்பதால் சில்லறை மீன் வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து பழைய மீன் ஏலம் விடும் இடத்தில் 100 விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் நிறுத்தும் வகையில் 12 மீட்டர் அகலம், 123 மீட்டர் நீளத்தில் ரூ.5 கோடியில் புதிதாக படகுகள் நிறுத்தும் இடம்(வார்ப்பு) கட்டப்பட உள்ளது.
இதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் ஜெயக் குமார் கூறியதாவது:-
கபட நாடகம்
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசை எதிர்த்து வரிகொடா இயக்கம் நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இதை ஆட்சியில் இல்லாதவர்கள் கூறலாம்.
ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் 10 ஆண்டுகள் கூட்டணியில் இருந்த மு.க.ஸ்டாலின் இப்படி கூறக்கூடாது. எதை சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டார்கள். இது ஒரு முழு கபட நாடகம்.
சிதறு தேங்காய் ஆகிவிடும்
மேகதாதுவில் அணை கட்ட முழுக்காரணம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். இதுவரை 2 முறை மத்திய அரசை எதிர்த்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளோம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது எத்தனை வழக்கு தொடர்ந்து இருப்பார்கள்?.
வைகோ, திருமாவளவன் கூட்டணி கொள்கை இல்லாதது. இந்த கூட்டணி தேர்தல் நேரத்தில் சிதறு தேங்காயை போல் ஆகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story