உத்தமபாளையம் அருகே, டிரைவர் சாவில் ‘திடீர்’ திருப்பம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் உணவில் விஷம் கலந்து கொன்ற மனைவி கைது - பரபரப்பு வாக்குமூலம்
உத்தமபாளையம் அருகே டிரைவர் சாவில் ‘திடீர்‘ திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், அவருடைய மனைவியே உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றது தெரிய வந்துள்ளது.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் அருகே உள்ள சுருளிப்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 27). லாரி டிரைவர். அவருடைய மனைவி கலைமணி (19). இவர்களுக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த மாதம் 8-ந்தேதியன்று, வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் ஈஸ்வரன் வீட்டில் இறந்து கிடந்தார்.
குடிப்பழக்கம் உடைய ஈஸ்வரன், போதையில் தவறி விழுந்து இறந்து விட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கலைமணி தெரிவித்தார். இதனையடுத்து, சுருளிப்பட்டி மயானத்தில் ஈஸ்வரனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் தனது குழந்தையை மாமனார் தர்மரிடம் கொடுத்து விட்டு, 3 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை எடுத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் அதேபகுதியில் வசிக்கிற அழகர்சாமி (26) என்பவருடன் சுற்றித்திரிந்தார்.
தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக ‘பர்தா‘ அணிந்து அழகர்சாமியுடன் சுற்றினார். மேலும் சாதாரண உடையிலும் அவருடன் வலம் வந்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தர்மரிடம் கூறினர். இதனால் தனது மருமகள் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் தனது மகன் சாவில் மர்மம் இருக்கலாம் என்றும் அவர் கருதினார்.
இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் தர்மர் புகார் செய்தார். அதன்பேரில் ஈஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி முன்னிலையில், சுருளிப்பட்டி மயானத்தில் புதைக்கப்பட்ட ஈஸ்வரனின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. மேலும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் அருண்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர், ஈஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
அப்போது, ஈஸ்வரனின் உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவருடைய மனைவி கலைமணியை பிடித்து போலீசார் கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கலைமணி திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். அதாவது, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தாலிக்கட்டிய கணவர் என்று கூட பாராமல் உணவில் விஷம் கலந்து கொடுத்து ஈஸ்வரனை கலைமணி தீர்த்து கட்டியது தெரியவந்தது. தேவாரம் மேட்டுப்பட்டியை சேர்ந்த அழகர்சாமியுடன், கலைமணிக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
தற்போது, அழகர்சாமி கம்பத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதற்காக, கலைமணியின் வீட்டருகே உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்து அழகர்சாமி வேலைக்கு சென்று வந்தார். இதனால் அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. இது, நாளடைவில் கள்ளக்காதலாகி விட்டது.
இந்தநிலையில் தான், தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஈஸ்வரனை தீர்த்து கட்டியுள்ளனர். இதனையடுத்து கலைமணியை போலீசார் கைது செய்தனர். கைதான அவர், போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய கணவர் ஈஸ்வரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். இதனால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்தநிலையில் எனது வீட்டருகே வசித்து வந்த அழகர்சாமியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
நாங்கள் இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம். மேலும் அவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்தேன். இதற்கு எனது கணவர் ஈஸ்வரன் முட்டுக்கட்டையாக இருப்பார் என்று கருதினேன். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி சம்பவத்தன்று ஈஸ்வரன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.
அப்போது, உணவில் விஷம் கலந்து அவருக்கு கொடுத்தேன். சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்தார். குடிபோதையில் தவறி விழுந்து இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறி நம்ப வைத்தேன். மேலும் என் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக, ஈஸ்வரனின் உடலை கட்டி பிடித்து அழுது நாடகமாடினேன்.
அதன்பின்னர், அழகர்சாமியுடன் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தேன். எனது நடத்தையில் மாமனார் தர்மருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு கலைமணி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே கலைமணியின் கள்ளக்காதலன் அழகர்சாமியை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியே தீர்த்து கட்டிய சம்பவம் உத்தமபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story