டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் கற்பித்தல் முறை பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளில் ‘ரோஷினி திட்டம்’ குமாரசாமி தொடங்கி வைத்தார்
டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் கற்பித்தல் முறையில் பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளில் ரோஷினி திட்டத்தை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்.
பெங்களூரு,
டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் கற்பித்தல் முறையில் பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளில் ரோஷினி திட்டத்தை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்.
ரோஷினி திட்டம்
பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மூலம் படம் கற்பிக்கும் ரோஷினி திட்டம் தொடக்க விழா பெங்களூரு அம்பேத்கர் பவனில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு, அந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தில் தூர்தர்ஷன் டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் வகுப்பறைகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இந்த பணியை மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்கிறது. இதற்காக பெங்களூரு மாநகராட்சி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் குமாரசாமி பேசியதாவது:-
குழந்தைகளுக்கு தரமான கல்வி
பெங்களூரு மாநகராட்சி பள்ளி-கல்லூரிகளில் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பித்தல் முறை அறிமுகம் செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வித்துறை நிபுணர்கள் இந்த பாடத்தை கற்பிக்க உள்ளனர்.
மாநகராட்சி, தனியார் பள்ளிகளில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் நிலை ஏற்பட வேண்டும். இந்த புதிய திட்டம் மூலம் மாநகராட்சி பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்கும்.
உச்சத்தை தொட்டவர்கள்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பாரத ரத்னா விருது பெற்றுள்ள விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் ஆகியோர் அரசு பள்ளிகளில் படித்து உச்சத்தை தொட்டவர்கள். மாநகராட்சி பள்ளி குழந்தைகளிடம் திறமை உள்ளது. ஆனால் அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவில்லை. அந்த குறையை போக்கவே இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஏழை தந்தை ஒருவர் தனது குழந்தையை தனியார் பள்ளியில் சேர்த்தார். ஆனால் குழந்தைக்கு ‘ஷூ’ வாங்கி கொடுக்க முடியாமல், தனது குழந்தையை அந்த தந்தை கொலை செய்துவிட்டார்.
திறன் மேம்பாட்டு பயிற்சி
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளோம். மேலும் ஏழை குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும்.
இந்த புதிய திட்டத்தை குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ரூ.100 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.500 கோடி இந்த திட்டத்திற்கு செலவிடப்படுகிறது.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.
இதில் மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத், ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story