காதல் கணவர் ஆணவக் கொலை செய்யப்பட்டதால் மனம் உடைந்தார்: தூக்குப்போட்டு பெண் சாவு உருக்கமான கடிதம் சிக்கியது
பெங்களூரு அருகே காதல் கணவர் ஆணவக் கொலை செய்யப்பட்டதால் மனம் உடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு அருகே காதல் கணவர் ஆணவக் கொலை செய்யப்பட்டதால் மனம் உடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.
காதல் கணவர் கொலை
ெபங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா பிதனூரு கிராமத்தை சேர்ந்தவர் ஹரீஷ் (வயது 27), டிரைவர். இவரும், நல்லூரு கிராமத்தை சேர்ந்த மீனாட்சி(25) என்பவரும் காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்திருந்தனர். 2 பேரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு மீனாட்சியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் வீட்டை விட்டு வெளியேறி ஹரீஷ், மீனாட்சி இருவரும் திருமணம் செய்திருந்தனர். இந்த நிலையில், கடந்த மாதம் (நவம்பர்) 21-ந் தேதி நல்லூரு அருகே ஹரீஷ் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சென்னராயப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
மேலும் ஹரீசை கொலை செய்ததாக மீனாட்சியின் சகோதரர் வினய் கைது செய்யப்பட்டார். வேறு சாதியை சேர்ந்த ஹரீஷ் தனது சகோதரியை காதலித்து திருமணம் செய்திருந்ததால், அவரை வினய் கொலை செய்திருந்தது தெரியவந்தது. இந்த ஆணவக் கொலை பெங்களூரு புறநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹரீஷ் கொலை செய்யப்பட்ட பின்பு பிதனூரு கிராமத்தில் உள்ள கணவர் வீட்டிலேயே மீனாட்சி வசித்து வந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில், நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென்று மீனாட்சி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மீனாட்சி தூக்கில் தொங்குவதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் விஸ்வநாதபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனாட்சியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது கணவர் கொலை செய்யப்பட்டதால் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த மீனாட்சி மனம் உடைந்து வாழ்ந்து வந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதற்கிடையில், மீனாட்சி எழுதி வைத்திருந்த கடிதம் போலீசார் கையில் சிக்கியது.
அதில், ‘நான் காதலித்து பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ததால், கணவரை இழந்து விட்டேன். இனிமேல் இந்த உலகத்தில் என்னால் வாழ முடியாது. எனது சாவுக்கு நானே காரணம். வேறு யாரும் காரணமில்லை. எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நடக்ககூடாது. காதலிப்பவர்கள் தங்களது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்யுங்கள்,’ என்று மீனாட்சி உருக்கமாக எழுதி இருந்தார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி கொண்டனர். மேலும் மீனாட்சியின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விஸ்வநாதபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story