கர்நாடக அரசுக்கு ரூ.50 கோடி- பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.25 கோடி அபராதம் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு


கர்நாடக அரசுக்கு ரூ.50 கோடி- பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.25 கோடி அபராதம் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 6 Dec 2018 10:00 PM GMT (Updated: 6 Dec 2018 9:53 PM GMT)

பெல்லந்தூர் உள்ளிட்ட ஏரிகளை பாதுகாப்பதில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி கர்நாடக அரசுக்கு ரூ.50 கோடியும், பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.25 கோடியும் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

பெங்களூரு, 

பெல்லந்தூர் உள்ளிட்ட ஏரிகளை பாதுகாப்பதில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி கர்நாடக அரசுக்கு ரூ.50 கோடியும், பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.25 கோடியும் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

பெல்லந்தூர் ஏரி மாசு

பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர் ஏரி அதிகளவில் மாசு அடைந்து உள்ளது. இதற்கு ஏரியில் தொழிற்சாலை கழிவுகள், சாக்கடை கழிவுகள் கலப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது. அவ்வப்போது மழை பெய்யும் வேளையில் பெல்லந்தூர் ஏரியில் வெள்ளை நுரை உருவாவது வழக்கமாக உள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏரி மற்றும் அதன் கரையில் உள்ள காய்ந்த புற்கள் தீப்பிடித்து எரிந்தன.

இதையடுத்து பெல்லந்தூர் ஏரி மாசு அடைந்தது குறித்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. விசாரணையின்போது, ஏரி தண்ணீர் மாசு அடையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கழிவுநீரை சுத்திகரிக்காமல் ஏரியில் விடும் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணை

இந்த உத்தரவை தொடர்ந்து மாநில அரசும், பெங்களூரு மாநகராட்சியும் பெல்லந்தூர் ஏரியை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. ஏரியை சுற்றியுள்ள பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

இந்த நிலையில், நேற்று மீண்டும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.

ரூ.75 கோடி அபராதம்

இந்த விசாரணையின்போது மாநில அரசு மற்றும் பெங்களூரு மாநகராட்சி ஆகியவை பெல்லந்தூர் ஏரியை பாதுகாப்பதில் தவறியதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியது. இந்த வேளையில் கால்வாய், ஏரி ஆக்கிரமிப்பை அகற்றாதது, ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்துவதில் அலட்சியம் உள்ளிட்ட நடவடிக்கைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்தது.

இதுதவிர, ‘‘தண்ணீரை மாசுபடுத்துவது என்பது சட்ட விரோதமானது, திடக்கழிவு மேலாண்மை என்பது நகர நிர்வாகத்தின் பொறுப்பாகும், இது அரசியலமைப்பு சட்டத்தில் கூட உள்ளது, இருப்பினும் மாநில அரசு அலட்சியமாக செயல்பட்டு இருக்கிறது, இதனால் கர்நாடக அரசுக்கு ரூ.50 கோடியும், பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.25 கோடியும் அபராதமாக விதிக்கப்படுகிறது’’ என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியது.

மேலும், பெல்லந்தூர் உள்பட ஏரிகளை பாதுகாக்கும் வகையில் ரூ.500 கோடியை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தனித்தொகையாக கர்நாடக அரசு வழங்க வேண்டும். இந்த தொகையை ஏரிகளை பாதுகாக்க மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன், கர்நாடக அரசு சார்பில் சுற்றுச்சூழலை மீட்பதற்காக ரூ.50 கோடியை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், பெங்களூரு மாநகராட்சி சார்பில் ரூ.10 கோடியை கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கண்காணிப்பு குழு

இதுதவிர, சில உத்தரவுகளையும் கர்நாடக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்தது.

அதன்படி, ‘பெல்லந்தூர் ஏரியுடன் சேர்த்து அகரா, வர்த்தூர் ஏரிகளை பாதுகாக்கும் திட்டத்தை அதிகாரிகள் வகுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளை பாதுகாக்காவிட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே முழு பொறுப்பு. ஏரிகள் பாதுகாப்புக்காக உயர்மட்ட குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இணையதளம் தொடங்கி ஏரியை பாதுகாக்க பொதுமக்களின் கருத்துகளையும், புகார்களையும் பெற வேண்டும். இந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான காலஅளவை கர்நாடக அரசு குறிப்பிட வேண்டும். இந்த நடவடிக்கைகளை பின்பற்றி செயல்படுத்தாவிட்டால் கர்நாடக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்படும். ஏரி பாதுகாப்பு கண்காணிப்பு குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ளது. இந்த குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்தோஷ் ஹெக்டே செயல்படுவார்’ போன்ற உத்தரவுகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப் பட்டுள்ளது.

Next Story