திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில்: குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்
திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட ஆத்துப்பாளையம், அண்ணா நகர், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வார்டு செயலாளர் சங்கர் தலைமையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு நேற்று போடப்பட்டு இருந்தது. இதனால் முக்கிய நிர்வாகிகளை மட்டும் கலெக்டரிடம் மனு கொடுக்க போலீசார் அனுப்பி வைத்தனர்.
பின்னர் முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
2-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குப்பையை அண்ணாநகர், திருவள்ளுவர் நகர் பகுதிக்கு நடுவில் குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் கொட்டி குப்பை கிடங்கு அமைக்கும் பணியை திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கி இருக்கிறார்கள். 300 குடும்பத்தினர் அப்பகுதியில் வசித்து வருகிறோம்.
ஏற்கனவே நாங்கள் அந்த இடத்தில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்தோம். அதையும் மீறி குப்பை கிடங்கு அமைக்கும் பணியை தொடங்கி இருக்கிறார்கள். இங்கு குப்பை கிடங்கு அமைத்தால் 2-வது வார்டு பகுதியில் இருந்து குப்பையை கொண்டு வந்து குவிப்பார்கள். இதனால் அருகில் குடியிருப்பவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வேறு இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
மேலும் மனு கொடுக்க வந்தவர்கள் தாங்கள் மேற்கண்ட பகுதியில் தான் வசிக்கிறோம் என்பதை தெரிவிக்கும் வகையில் ஆதார் அட்டை நகலையும் கொண்டு வந்து கலெக்டரிடம் கொடுத்தனர். இதுபோல் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று ஆணையாளர் சிவகுமாரிடமும் மனு கொடுத்து முறையிட்டனர்.
Related Tags :
Next Story