ரூ.1 லட்சம் லஞ்சம்: உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் கைது


ரூ.1 லட்சம் லஞ்சம்: உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 6 Dec 2018 11:00 PM GMT (Updated: 6 Dec 2018 10:47 PM GMT)

டோம்பிவிலியில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தானே, 

டோம்பிவிலியில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

லஞ்சம்

தானே டோம்பிவிலி போலீஸ் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளர் ஒருவருக்கு எதிராக ஒரு குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் அவரை கைது செய்யாமல் இருப்பதற்காக, இந்த வழக்கை விசாரித்து வரும் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் வாக் (வயது34) என்பவர் மகேஷ் பாட்டீல் (36) என்பவர் மூலம் ரூ.10 லட்சம் லஞ்சமாக கேட்டு இருக்கிறார்.

இதை கேட்டு நகைக்கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் அந்த பணத்தை தருவதாக ஒப்புக் கொண்டார்.

3 பேர் கைது

பின்னர் இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள் கொடுத்த யோசனையின்படி, நகைக்கடைக்காரர் முதல் கட்டமாக ரூ.1 லட்சம் தருவதாக தெரிவித்தார். நேற்று முன்தினம் மாலை டோம்பிவிலியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து நகைக்கடைக்காரரிடம் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் வாக் சார்பில் பிரகாஷ் டார்ஜி (36) என்பவர் வந்து பணத்தை வாங்கினார். அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் வாக், மகேஷ் பாட்டீல் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story