பாபர் மசூதி இடிப்பு தினம்: முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பாபர் மசூதி இடிப்பு தினம்: முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2018 3:45 AM IST (Updated: 7 Dec 2018 4:33 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருப்பூரில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைந்து முடித்து முஸ்லிம்களிடம் இடத்தை ஒப்படைக்கக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் பாசிச எதிர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு த.மு.மு.க. மாவட்ட தலைவர் நசீர்தீன் தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஷாநவாஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

பாபர் மசூதியை மீண்டும் கட்டித்தரக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அபுசாலிக், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் முஜிபுர் ரகுமான், பொருளாளர் காஜா மைதீன், த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் சபீர்தீன், ஹாரூண் ரஷீத், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் முத்துமீரான், சர்புதீன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் குழந்தைகளுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பாபர் மசூதியை கட்டித்தரக்கோரி வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி நின்றனர். முடிவில் த.மு.மு.க. மாவட்ட துணைத்தலைவர் சித்திக் நன்றி கூறினார்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ.) கட்சி சார்பில் ‘பாபர் மசூதியை மீட்போம், இந்தியாவை காப்போம்’ என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் அபுதாகீர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஹாரீஸ் பாபு வரவேற்று பேசினார்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர் முபாரக் பாஷா, திராவிடர் விடுதலை கழகத்தின் மாநில பொருளாளர் துரைசாமி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். பாபர் மசூதியை மீட்கக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் முகமது இஸ்மாயில் நன்றி கூறினார்.

இதுபோல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு நேற்று மதியம் நடைபெற்றது. பாபர் மசூதி இடத்தை முழுமையாக முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மன்சூர் அகமது தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அப்துல் காதிர் மன்பா, மாவட்ட செயலாளர் யாசர் அராபத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சையத் முஸ்தபா, திராவிடர் விடுதலை கழக மாவட்ட தலைவர் முகில்ராசு, அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் முகமது யாசர், கொங்கு இளைஞர் பேரவை மாநகர செயலாளர் துரை, தண்டபாணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். 

Next Story