20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்,
கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும், கிராம நிர்வாக அலுவலகங்களில் குடிநீர், மின்சார வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், ‘ஆன்லைனில்’ சான்றிதழ் கொடுக்க இணையதள சேவை வழங்க வேண்டும், மாவட்ட பணியிட மாறுதல் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த மாதம் 28-ந் தேதி அவர்கள் முதற்கட்டமாக ‘ஆன்லைனில்’ சான்றிதழ் வழங்கும் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 2-ம் கட்டமாக கடந்த 5-ந் தேதி தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இரவு நேர தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் கோரிக்கைகளை அரசு நிறை வேற்றாவிட்டால் 7-ந் தேதி கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரகு, பொருளாளர் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் கொய்யாமணி வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சுரேஷ் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார். இதேபோன்று மாவட்ட முன்னாள் தலைவர் மதிவாணன், துணை செயலாளர் கதிரவன், நிர்வாகிகள் பலராமன், சந்திரபூபதி ஆகியோரும் பேசினர். இதில், கிராம நிர்வாக அலுவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் வேலூர் தாலுகா சங்க தலைவர் கனகராஜ் நன்றி கூறினார்.
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், “20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் 300-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் வருகிற 10-ந் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும்” என்றனர்.
Related Tags :
Next Story