வேலூர் மாவட்டத்துக்கு 3,696 டன் உரம் ரெயிலில் வந்தது
வேலூர் மாவட்டத்துக்கு 3,696 டன் உரம் நேற்று சரக்கு ரெயிலில் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அடுக்கம்பாறை,
வேலூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பருவ பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக கார்த்திகை பட்டம் மற்றும் போகி பட்டம் பருவத்தில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்டவைகள் அதிகளவில் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தமிழகத்திற்கு கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, கப்பல்கள் மூலமாக ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.
பின்னர் அங்கிருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்திற்கு தேவையான உர மூட்டைகள் காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலமாக காட்பாடி ரெயில் நிலையத்திற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தது.
உர மூட்டைகளை ஏற்றி வந்த ரெயில் நேற்று காலை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இதில் மொசைக் கம்பெனியின் டி.ஏ.பி உரம் 462 டன், பொட்டாஷ் 3,234 டன் என மொத்தம் 3,696 டன் உர மூட்டைகள் ஒதுக்கீடு செய்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.
இதனை வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுப்புலட்சுமி மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுபாடு) சுஜாதா ஆகியோர் சரிபார்த்தனர்.
பின்னர் லாரிகள் மூலமாக கீழ்மொணவூர் கிராமத்தில் உள்ள தனியார் குடோனில் உர மூட்டைகள் தற்காலிகமாக இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த உர மூட்டைகள் இன்று முதல் குடோனில் இருந்து தனியார் உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பப்படும். இதில் டி.ஏ.பி ஒரு மூட்டை ரூ.1,450-க்கும், பொட்டாஷ் ஒரு மூட்டை ரூ.950-க்கும் விற்பனை செய்யப்படும்.
விவசாயிகள் மண்வள அட்டையின் பரிந்துரைபடி ஆதார் எண்ணுடன் சென்று ‘பாயிண்ட் ஆப் சேல்’ எந்திரம் மூலம் ரசீது பெற்று பயனடையுமாறு வேளாண்மை இணை இயக்குனர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story