அ.தி.மு.க. எம்.பி. தத்தெடுத்த கிராமத்தை ஆய்வு செய்ய வந்த: மத்திய குழு அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள் - கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு


அ.தி.மு.க. எம்.பி. தத்தெடுத்த கிராமத்தை ஆய்வு செய்ய வந்த: மத்திய குழு அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள் - கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 7 Dec 2018 10:00 PM GMT (Updated: 7 Dec 2018 4:50 PM GMT)

கள்ளக்குறிச்சி அருகே காமராஜ் எம்.பி. தத்தெடுத்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய குழு அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட க.அலம்பலம் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சாலை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. இதற்கிடையே கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ் க.அலம்பலம் கிராமத்தை தத்தெடுத்தார்.

ஆனால் இதுவரை அந்த கிராமத்துக்கு சாலை, கழிவுநீர் கால்வாய், மருத்துவ வசதி, குடிநீர், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை காமராஜ் எம்.பி. செய்து கொடுக்கவில்லை.

மேலும் அனைத்து தெருக்களிலும் நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால், மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு புகார் மனு அனுப்பினர்.

அதன் பேரில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று சென்னையில் இருந்து சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் மத்திய குழு அதிகாரிகளான சுனில்குமார், மதுசூதனன் ஆகியோர் க.அலம்பலம் ஊராட்சி அலுவலகத்துக்கு வந்து அங்கிருந்த பதிவேடுகளை ஆய்வு செய்தனர். அப்போது காமராஜ் எம்.பி., கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமி, ஒன்றிய பொறியாளர் அருண், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்வதி ஆகியோரும் உடனிருந்தனர்.

இதையடுத்து மத்திய குழு அதிகாரிகள் அங்கிருந்த அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கன்வாடி மையத்தின் தரைதளம், சுற்றுச்சுவர் சேதமடைந்து காணப்பட்டது. மேலும் அங்கன்வாடி மையத்தின் முன்பு கழிவுநீர் தேங்கி நின்றது.

இதற்கிடையே சென்னையில் இருந்து மத்திய குழு அதிகாரிகள் வந்தது பற்றி அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென அதிகாரிகளை முற்றுகையிட்டு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து கிராம மக்கள், காமராஜ் எம்.பி. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஓட்டு கேட்டு வந்ததற்கு பிறகு, தற்போது தான் வருகிறார். தங்கள் கிராமத்தை தத்தெடுத்த அவர் இதுவரை எந்தவொரு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

அப்போது அதிகாரிகள், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அனைத்து தெருக்களுக்கும் சென்று கிராமத்தில் குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலை வசதி, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Next Story