பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஆவடி ரெயில் நிலையத்தில் புதிய பயணச்சீட்டு அலுவலகம் திறப்பு


பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஆவடி ரெயில் நிலையத்தில் புதிய பயணச்சீட்டு அலுவலகம் திறப்பு
x
தினத்தந்தி 8 Dec 2018 4:45 AM IST (Updated: 7 Dec 2018 11:42 PM IST)
t-max-icont-min-icon

பயணிகளின் கோரிக்கையை ஏற்று ஆவடி ரெயில் நிலையத்தில் 3 கவுண்ட்டர்களுடன் கூடிய புதிய பயணச்சீட்டு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

ஆவடி,

ஆவடி ரெயில் நிலையத்துக்கு ஆவடி மற்றும் அதை சுற்றியுள்ள சுமார் 20 கிராமங்களில் இருந்து தினமும் சுமார் 80 ஆயிரம் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆவடியில் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் ராணுவ தொழிற்சாலைகள் உள்ளன.

இந்நிலையில் ஏற்கனவே ஆவடி ரெயில்வே ஸ்டேஷன் சாலையில் ஒரு பயணச்சீட்டு அலுவலகம் மட்டுமே இருந்தது. அதில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தால் பயணச்சீட்டு வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி இருந்தது. இதனால் பயணச்சீட்டு வாங்குவதில் சிரமம் ஏற்படுவதாகவும், சில நேரங்களில் குறிப்பிட்ட ரெயில்களை தவறவிடுவதாகவும் பயணிகள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

இந்த குறையை போக்க கூடுதலாக ஒரு பயணச்சீட்டு அலுவலகம் திறக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கையும் வைத்தனர். இந்த கோரிக்கையை ரெயில்வே நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. அதன்படி, ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஆவடி ரெயில் நிலையம் அருகே வடக்கு பஜார் பகுதியில் 3 கவுண்ட்டர்கள் அடங்கிய புதிய பயணச்சீட்டு அலுவலகம் கட்டப்பட்டது.

புதிய பயணச்சீட்டு அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், திருவள்ளூர் எம்.பி. டாக்டர் பி.வேணுகோபால், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரும், ஆவடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.பாண்டியராஜன், சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் நவீன் குலாட்டி ஆகியோர் கலந்துகொண்டு புதிய பயணச்சீட்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

இந்த விழாவில் ரெயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் மனோஜ், கோட்ட வணிக மேலாளர் சத்திய நாராயண அரி, ஆவடி நகர அ.தி.மு.க. செயலாளர் தீனதயாளன் மற்றும் ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபற்றி ரெயில்வே நிர்வாகம் கூறுகையில், ஆவடி ரெயில் நிலையத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு அதில் ரூ.20 லட்சத்துக்கு பயணச்சீட்டு அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. மீதம் உள்ள ரூ.80 லட்சத்தில் எஸ்கலேட்டர், லிப்ட், முன்பதிவு மற்றும் முன்பதிவு அல்லாத கூடுதல் பயணச்சீட்டு கவுண்ட்டர்கள், நடை மேம்பாலம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

Next Story