பள்ளிப்பட்டில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர் சாவு


பள்ளிப்பட்டில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர் சாவு
x
தினத்தந்தி 8 Dec 2018 3:30 AM IST (Updated: 7 Dec 2018 11:57 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர் பரிதாபமாக இறந்தார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆதிவராகபுரம் காலனியை சேர்ந்தவர் தாயார் முனுசாமி. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி. இவரது மகள் கோகிலா, மருமகன் கவியரசன் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். கவியரசன் கர்ப்பிணியாக உள்ள தனது மனைவி கோகிலாவை மருத்துவ பரிசோதனைக்கு சோளிங்கரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு நேற்று அழைத்து சென்றனர். மனைவிக்கு பரிசோதனை முடிந்த பிறகு தனக்கு ஜலதோஷம், தொண்டை வலி இருப்பதாக அங்கிருந்த டாக்டரிடம் கவியரசன் தெரிவித்தார்.

அவரை பரிசோதித்த டாக்டர் அவருக்கு ஊசி போட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கவியரசன் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு செல்லும் வழியில் கவியரசன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் ஆத்திரம் அடைந்து ஆதிவராகபுரம் கூட்ரோட்டில் ஆர்.கே.பேட்டை- சோளிங்கர் சாலையில் நேற்று மாலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது கவியரசன் உடலை கொண்டு வந்த ஆம்புலன்சை நிறுத்தி தவறான ஊசி போட்ட டாக்டரை கைது செய்யவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை எழுப்பினர்.

இதனால் அங்கு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆர்.கே.பேட்டை சோளிங்கர் பகுதிகளை சேர்ந்த போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story