தெருவிளக்குகள் எரிவதில்லை: இருளில் மூழ்கிய ஏலமன்னா - பொதுமக்கள் அவதி
தெருவிளக்குகள் எரியாததால், ஏலமன்னா பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஏலமன்னாவில் வனத்துறை குடியிருப்புகள் உள்ளன. மேலும் பொதுமக்களின் குடியிருப்புகளும் இருக்கின்றன. இந்த பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் அடிக்கடி குடியிருப்புகளை காட்டுயானைகள் முற்றுகையிட்டு வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான தெருவிளக்குகள் இரவில் எரிவது இல்லை. இதனால் ஏலமன்னா பகுதி இரவு நேரத்தில் இருளில் மூழ்கி கிடக்கிறது. காட்டுயானைகள் வந்து அருகில் நின்றால்கூட, தெரியாத அளவுக்கு இருளில் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் பெரும்பாலான தெருவிளக்குகள் பழுதாகி கிடப்பதால், இரவில் எரிவதே இல்லை. அவற்றை சரி செய்ய வேண்டும் என்று நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காட்டுயானைகள் நடமாட்டம் உள்ள பகுதி இருளில் மூழ்கி கிடப்பதால், வனத்துறையினர்கூட பீதியில் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே இனிமேலாவது பழுதான தெருவிளக்குகளை சரி செய்து, ஏலமன்னா பகுதி இரவில் ஒளிரும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story