நீலகிரியில்: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை - கலெக்டர் பேச்சு


நீலகிரியில்: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை - கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 7 Dec 2018 10:30 PM GMT (Updated: 7 Dec 2018 6:57 PM GMT)

நீலகிரியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

ஊட்டி,

முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் படைவீரர் கொடி நாள் விழா ஊட்டியில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை உதவி இயக்குனர் சரவணன் முன்னிலை வகித்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா 26 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

படைவீரர் கொடி நாளில் நம் நாட்டிற்காக தன்னலம் கருதாது சேவை செய்து வரும் முப்படை வீரர்களையும், அவர்களின் வீரதீர செயல்களையும் நினைவு கூர வேண்டும். பாதுகாப்பு படைவீரர்கள் தங்களது இளமை காலத்தில் குடும்பத்தை விட்டு பிரிந்து பல்வேறு கடினமான பணிகளை செய்கிறார்கள். பணியின்போது தங்களது உயிர் மற்றும் உடல் உறுப்புகளை இழந்தும்கூட நாட்டிற்கு அரும் பணியாற்றுகின்றனர்.

படைவீரர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 1944 முன்னாள் படைவீரர்களும், 789 முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்களும் இதுவரை தங்களது பெயர்களை பதிவு செய்து உள்ளனர். அவர்களில் 2-ம் உலகப்போரில் பணியாற்றி ஓய்வூதியம் ஏதும் பெறாத முன்னாள் படைவீரர்களுக்கு ஆயுட்கால நிதியுதவியாக ரூ.6 ஆயிரம் வீதம் மற்றும் கைம்பெண்களுக்கு ரூ.3 ஆயிரம் வீதம், மனநலம் குன்றியோர்களுக்கான மாதாந்திர நிதியுதவி, கண்பார்வையற்றோர் நிதியுதவி என்பது உள்பட அவர்களது வாழ்நாள் வரையிலும் மாதந்தோறும் முன்னாள் படைவீரர் நல நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. அவ்வாறு 44 பேருக்கு கடந்த ஆண்டு ரூ.16 லட்சத்து 78 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.

நடப்பாண்டில் மகளுக்கு திருமண நிதியுதவியாக ரூ.20 ஆயிரம் வீதம் முன்னாள் படைவீரர்கள் 20 பேருக்கு ரூ.4 லட்சம், போரில் இறந்த படைவீரர்களுக்கு வருடாந்திர பராமரிப்பு மானியமாக ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 14 பேருக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம், கடந்த ஆண்டில் பாதுகாப்பு அமைச்சரின் விருப்புரிமை நிதியில் இருந்து முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண மானியம், மருத்துவ உதவித்தொகை என 256 பேருக்கு ரூ.30 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.

அனைத்து நலத்திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்திட கொடி நாள் நிதி வசூல் தொகை பொதுமக்களிடம் இருந்து பல்வேறு துறை அதிகாரிகளால் திரட்டப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.57 லட்சத்து 84 ஆயிரமும், இந்த ஆண்டு இதுவரை ரூ.10 லட்சத்து 60 ஆயிரத்து 300-ம் கொடி நாள் தொகையாக திரட்டப்பட்டு உள்ளது. முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துக்கு மக்களிடையே அங்கீகாரமும், பெருமையும் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமின் கர்னல் குப்தா கூறினார். நான் நீலகிரியில் அனைத்து முன்னாள் ராணுவ குடும்பத்தினருக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, முன்னாண் ராணுவ அதிகாரி கே.ஆர்.மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story