இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு: வங்கிக்குள் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்


இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு: வங்கிக்குள் பொதுமக்கள் உள்ளிருப்பு  போராட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2018 3:00 AM IST (Updated: 8 Dec 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூர் இந்திராகாந்தி நகரில் உள்ள கான்கார்டு கண்டெய்னர் யார்டில் பாரத ஸ்டேட் வங்கி கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

திருவொற்றியூர்,

இந்த வங்கியில், கான்கார்டு கண்டெய்னர் யார்டில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் இந்திராகாந்தி நகர், மணலி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் கணக்கு வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த வங்கியில் போதிய அளவு பண பரிமாற்றம் இல்லை என கூறப்படுகிறது. எனவே இந்த வங்கியை தண்டையார் பேட்டைக்கு இடம் மாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நேற்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100 பேர் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் வங்கிக்குள் சென்று அங்கே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே போராட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வங்கி இடம் மாற்றம் குறித்து உயர் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.

அதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story