மக்காச்சோள பயிர்களுடன் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை இழப்பீடு வழங்க கோரிக்கை


மக்காச்சோள பயிர்களுடன் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை இழப்பீடு வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 7 Dec 2018 10:00 PM GMT (Updated: 7 Dec 2018 7:01 PM GMT)

படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுடன் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் இழப்பீடு கேட்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி, 

படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுடன் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் இழப்பீடு கேட்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படைப்புழு தாக்குதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்களை படைப்புழுக்கள் தாக்கி சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்தனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

போதிய மழை இல்லாததால், கோவில்பட்டி தாலுகாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து கடன் மற்றும் வரி தள்ளுபடி செய்ய வேண்டும். கடந்த 2016-2017-ம் ஆண்டு பருத்தி பயிரிட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருடன் விவசாயிகள் நேற்று காலையில் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை கைகளில் வைத்தவாறு, கோஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், துணை செயலாளர் சேதுராமலிங்கம், நகர செயலாளர் சரோஜா, தாலுகா குழு உறுப்பினர் ஜெகநாதன், இடைசெவல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுப்புராஜ் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், தாசில்தார் பரமசிவன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story