குற்றாலத்தில் பரபரப்பு மசாஜ் சென்டரில் விபசாரம்; வாலிபர் உள்பட 5 பேர் கைது 2 இளம்பெண்கள் மீட்பு
குற்றாலத்தில் மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபட்டதாக வாலிபர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
தென்காசி,
குற்றாலத்தில் மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபட்டதாக வாலிபர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
தனியார் விடுதிகள்
நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் குற்றாலமும் ஒன்றாகும். இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இதமான வெயிலும் அடிக்கும். இந்த சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள்.
சீசன் மாதங்கள் தவிர சபரிமலை சீசனிலும் அய்யப்ப பக்தர்கள் குற்றாலம் வந்து செல்வார்கள். தற்போது சபரிமலை சீசன் என்பதாலும், அருவிகளில் பருவமழை காரணமாக தண்ணீர் கொட்டுவதாலும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் குற்றாலம் வந்து செல்கிறார்கள். குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக ஏராளமான தனியார் விடுதிகள் உள்ளன.
விபசாரம்
இந்த தனியார் விடுதிகளில் வசதிகளுக்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சமீப காலமாக இந்த விடுதிகள் சிலவற்றில் ‘ஸ்பா’ எனப்படும் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் சில சென்டர்கள் முறையான அனுமதி பெற்றும், சில சென்டர்கள் அனுமதி பெறாமலும் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
மசாஜ் சென்டர்களில் ஆரோக்கியத்திற்காக மசாஜ் செய்யப்படுகிறது என்று விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கு மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் மற்றும் போலீசார் குற்றாலத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இயங்கிய மசாஜ் சென்டரில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு 2 இளம்பெண்களை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடந்தது தெரியவந்தது.
5 பேர் கைது
இது தொடர்பாக செங்கோட்டையை சேர்ந்த முத்துக்குமார் (39), கொல்லத்தை சேர்ந்த அன்சார் (40), ஸ்ரீரகு (30), சைன் (36), சனூஜ் (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அங்கிருந்த கும்பகோணத்தை சேர்ந்த பவானி (வயது 24), பெங்களூரை சேர்ந்த ஷபினா (22) ஆகிய 2 பேரை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அந்த விடுதியின் மேலாளரான குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரத்தை சேர்ந்த சபரிநாதன் (25), பாவூர்சத்திரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (36), புளியரையை சேர்ந்த ராஜா (28) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
குற்றாலத்தில் உள்ள விடுதிகளில் இதுபோன்று விபசாரம் நடக்கிறதா? என தொடர்ந்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story