வெள்ளிமலை பகுதியில்: உலா வரும் காட்டுயானைகள் - வனத்துறையினர் தீவிர ரோந்து


வெள்ளிமலை பகுதியில்: உலா வரும் காட்டுயானைகள் - வனத்துறையினர் தீவிர ரோந்து
x
தினத்தந்தி 7 Dec 2018 9:45 PM GMT (Updated: 7 Dec 2018 7:31 PM GMT)

வெள்ளிமலை பகுதியில் காட்டுயானைகள் உலா வருவதால் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கடமலைக்குண்டு, 

கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி வருசநாடு, கண்டமனூர், மேகமலை ஆகிய 3 வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் மான், கரடி, புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. மூலவைகை ஆறு இந்த வனப்பகுதியில் இருந்தே உற்பத்தியாகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளிமலை வனப்பகுதியில் போதிய அளவில் மழை இல்லை. இதனால் வனப்பகுதியில் உள்ள சிறு ஓடைகள் மற்றும் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாமல் காணப்பட்டது. எனவே வனவிலங்குகள் குடிநீர் தேடி வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்தது. குறிப்பாக காட்டுயானைகள் நீர் பற்றாக்குறை காரணமாக வனப்பகுதியின் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றது. இதனால் கடந்த சில மாதங்களாக வெள்ளிமலை பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெள்ளிமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. அதன்காரணமாக மூலவைகை ஆறு மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டது. தொடர் மழையின் காரணமாக வனப்பகுதியில் காய்ந்த நிலையில் இருந்த புற்கள், மரங்கள் செழிப்படைந்தது. கடந்த சில நாட்களாக வெள்ளிமலை வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசரடி கிராமத்தில் தேனி-வெள்ளிமலை சாலையில் நேற்று காட்டுயானை ஒன்று உலா வந்தது. இந்த சாலை வழியாக மலைக்கிராமங்களுக்கு வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. தற்போது காட்டுயானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால் வெள்ளிமலை சாலையில் செல்லும் வாகனங்களை பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story