காவிரி ஆற்றில் மூழ்கி இரட்டை குழந்தைகள் சாவு; திதி கொடுக்க வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
திதி கொடுக்க சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி இரட்டை குழந்தைகள் இறந்தன.
பவானி,
நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையம் சமயச்சங்கிலியை சேர்ந்தவர் சதீஷ்குமார். அந்த பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு தமிழ் அழகன் (வயது 5), தமிழ்செல்வன் (5) என்ற இரட்டை குழந்தைகள் இருந்தனர்.
சதீஷ்குமாருக்கு சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானியாகும். நேற்று இவரின் தாத்தா பரமசிவத்துக்கு இறந்த நாள். அதனால் அவருக்கு திதி கொடுப்பதற்காக தன்னுடைய மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பவானிக்கு சென்றார்.
சதீஷ்குமாரின் வீடு பவானி தேர்வீதியில் காவிரி கரையை ஒட்டியுள்ள மீனவர் தெருவில் உள்ளது. அதனால் அங்கேயே பரமசிவத்துக்கு மாலை 5½ மணி அளவில் திதி கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். தமிழ் அழகன், தமிழரசன் இருவரும் அருகே இருந்த படித்துறையில் விளையாடினார்கள். திதி கொடுத்து முடித்த பின்னர் சதீஷ்குமார் பார்த்தபோது குழந்தைகளை காணவில்லை.
உடனே பதறி அடித்துக்கொண்டு உறவினர்களுடன் சேர்ந்து அனைத்து இடங்களிலும் தேடினார்கள். குழந்தைகள் ஆற்றில் தெரியாமல் இறங்கி தண்ணீரில் மூழ்கிவிட்டார்களோ? என்று மீனவர்களும் பரிசலில் சென்று காவிரி ஆற்றில் தேடிப்பார்த்தார்கள்.
இந்தநிலையில் இரவு 7 மணி அளவில் பவானி செல்லாண்டி அம்மன் கோவில் படித்துறையில் ஒரு குழந்தையின் உடல் மிதந்தது. அந்த குழந்தையின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்கள். அது தமிழ் அழகனா?, தமிழ் செல்வனா? என்று கண்டுபிடிப்பதற்குள், செல்லாண்டி அம்மன் கோவில் படித்துறை அருகேயே மற்றொரு குழந்தையின் உடலும் மேலே மிதந்து வந்தது. இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்குள் மீனவர்களே அந்த குழந்தையின் உடலையும் மீட்டார்கள்.
சதீஷ்குமார் தாத்தாவுக்கு திதி கொடுத்துக்கொண்டு இருந்தபோது, குழந்தைகள் 2 பேரும் தெரியாமல் காவிரி ஆற்றில் இறங்கி மூழ்கி இறந்துவிட்டது தெரிந்தது.
குழந்தைகளின் உடல்களை பார்த்து சதீஷ்குமாரும், அவருடைய மனைவியும் கதறி துடித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இரட்டை குழந்தைகள் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தது குறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.