இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல் முறையாக ‘பேஸ் ரீடிங்’ முறையில் மாணவ, மாணவிகளின் வருகை பதிவு - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல் முறையாக ‘பேஸ் ரீடிங்’ முறையில் மாணவ, மாணவிகளின் வருகை பதிவு - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 8 Dec 2018 4:00 AM IST (Updated: 8 Dec 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல் முறையாக ‘பேஸ் ரீடிங்’ முறையில் மாணவ– மாணவிகளின் வருகை பதிவு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

நம்பியூர்,

கோபி சட்டசபை தொகுதிக்கு உள்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் படிக்கும் 800 மாணவ– மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளிக்கூடங்களில் நடந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நம்பியூர் அருகே உள்ள கூடக்கரை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தற்போது பள்ளிக்கூட மாணவ– மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அடுத்த ஆண்டு முதல் பள்ளி திறக்கப்பட்ட 15 நாட்களுக்குள் மடிக்கணினி, விலையில்லா சைக்கிள்கள் வழங்க முதல்– அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்வித்துறையில் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் மாணவ– மாணவிகளின் வருகையை ‘பேஸ் ரீடிங்’ (இன்ப்ரா ரெட் கதிர் வீச்சு மூலம் கண் கருவிழிகள் சென்சார் செய்யப்படும்) முறையில் வருகை பதிவு மேற்கொள்ளப்பட உள்ளது. முதல்கட்டமாக இது சென்னை அசோக் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற திங்கட்கிழமை (10–ந் தேதி) தொடங்கப்பட உள்ளது.

அரசின் சார்பில் ஆங்கில வழிக்கல்வி பாடப்புத்தகங்கள் காலதாமதமாக வினியோகிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கிறேன். எல்லா பாடப்புத்தகங்களும் குறிப்பிட்ட நேரத்தில் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. ஒரே ஒரு பள்ளிக்கு மட்டும் 2 நாட்கள் காலதாமதம் ஆனது. இனி இதுபோல் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய சீருடைகள் தைப்பதில் அளவு மற்றும் தையலில் குறைபாடுகள் உள்ளது என்ற குற்றச்சாட்டு என்னுடைய கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த குறைபாடுகள் விரைவில் சரி செய்யப்படும். கடந்த ஆண்டு 250 நடுநிலைப்பள்ளிக்கூடங்கள் உயர்நிலைப்பள்ளிக்கூடங்களாகவும், 200 உயர்நிலைப்பள்ளிக்கூடங்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

பேட்டியின் போது நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் தம்பி சுப்பிரமணியம், ஆவின் இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி, பேரூராட்சி செயலாளர் கருப்பணன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சேரன் சரவணன் உள்பட பலர் இருந்தனர்.


Next Story