பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்


பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 Dec 2018 4:00 AM IST (Updated: 8 Dec 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றது.

நெல்லை,

நெல்லை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றது. போட்டிகளை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

விளையாட்டு போட்டி

நெல்லை மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. போட்டிகளை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) வெங்கடேஷ் வரவேற்றார். கனரா வங்கி பொது மேலாளர் ராமசுப்பிரமணியன், ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் சுரேஷ் வாகீல், உதவி கலெக்டர் (முத்திரை) விஜயகுமார் ஆகியோர் பேசினர்.

இதில் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த ஆண், பெண் ஊழியர்கள் 532 பேர் கலந்து கொண்டனர். ஆண்களுக்கு தடகள பிரிவில் 100 மீட்டர், 200 மீீட்டர், 800 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டம் மற்றும் தொடர் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

பெண்களுக்கான தடகள பிரிவில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. மேலும் ஆண், பெண் ஊழியர்களுக்கு இறகுப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், கபடி, மேஜைப்பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன.

பரிசு-சான்றிதழ்

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் குமர மணிமாறன், அமலராஜன், அமர்நாத், சத்யகுமார் ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.

Next Story