வேடசந்தூர் அருகே பரபரப்பு: ஆள்மாறாட்டத்தில் 2 பேருக்கு கத்திக்குத்து - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
வேடசந்தூர் அருகே ஆள்மாறாட்டத்தில் 2 பேரை கத்தியால் குத்திவிட்டு தப்பிசென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சொட்டமாயனூரை சேர்ந்த நட்சத்திரம் மகன் கருப்பையா (வயது 24). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர், தனது உறவினர்களான சதீஷ் (23), முருகன் (24) ஆகியோருடன் நல்லமனார்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு சொட்டமாயனூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை கருப்பையா ஓட்டினார்.
மாரம்பாடி ரோட்டில், நல்லமனார்கோட்டை அருகே உள்ள ரெயில்வே கேட்டை தாண்டி வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் நின்றுகொண்டிருந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் அவர்கள், தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியால் தாக்க முயன்றனர்.
இதைக்கண்ட 3 பேரும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பியோட முயன்றனர். இதில் கருப்பையா, முருகன் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. சதீஷ் தப்பியோடி விட்டார். கருப்பையாவுக்கு வலது கண் பக்கத்திலும், முருகனுக்கு காலிலும் காயம் ஏற்பட்டது.
இந்தநிலையில் அந்த கும்பலை சேர்ந்த ஒருவர், திடீரென நாம் தீர்த்து கட்ட வந்தவர்கள் இவர்கள் இல்லை என்றும், அவர்கள் வேறு நபர்கள் என்றும் தெரிவித்தார். இதனையடுத்து அந்த கும்பல், அவர்களை விட்டு காரில் ஏறி தப்பி சென்று விட்டது.
இதற்கிடையே கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த கருப்பையாவையும், முருகனையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். பின்னர் கருப்பையா மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நல்லமனார் கோட்டை கிராமத்தில் முன்விரோதம் காரணமாக, மற்றொரு கும்பலை தீர்த்துக்கட்டுவதற்காக வந்த மர்மநபர்கள் ஆள்மாறட்டம் காரணமாக கருப்பையா உள்ளிட்ட 2 பேரை கத்தியால் குத்தியது தெரியவந்தது. மேலும் அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story