மாவட்டத்தில் 1.8 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டை கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
நடப்பு ஆண்டில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 579 மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்தார்.
நாமக்கல்,
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் மாவட்ட வேளாண்மைதுறை சார்பில் உலக மண்வள தினத்தையொட்டி கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, உலக மண்வள தினத்தையொட்டி அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியினை பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் விவசாயிகளுக்கு மண்வள அட்டையினை வழங்கி பேசியதாவது:-
வளமான மண், பாசனநீர்் மற்றும் வேளாண் இடுபொருட்கள் பயிர் உற்பத்திக்கு மிகவும் இன்றியமையாதது. சாகுபடி செய்யும் நிலத்தில் மண் வளமானதாக இல்லை என்றால் பயிரின் உற்பத்தித்திறன் வெகுவாக குறைவதோடு, பிற இடுபொருட்களின் பயன்பாடும் குறைய வாய்ப்பு உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 3,800 மண்வள அட்டைகளும், 325 பாசன நீர் அட்டைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. தேசிய மண்வள இயக்கத்தின் வாயிலாக வேளாண்மைத்துறை மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களிலும் உள்ள விவசாயிகளின் வயல்களில் மண்மாதிரிகளை இலவசமாக பரிசோதனை செய்து, அதன் அடிப்படையில் மண்வள அட்டை உரிய உர பரிந்துரையுடன்் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2016-17, 2017-18-ம் ஆண்டுகளில் 37 ஆயிரத்து 408 மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, 2 லட்சத்து 40 ஆயிரத்து 144 மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது.
நடப்பு ஆண்டில் 18 ஆயிரத்து 136 மண் மாதிரிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 579 மண்வள அட்டைகள் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் டாக்டர் அகிலா, நாமக்கல் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், துணை இயக்குனர் அசோகன், அரசுத்துறை அலுவலர்கள், களப்பணியாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story