திண்டுக்கல் அரசு மருத்துவமனையில்: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை


திண்டுக்கல் அரசு மருத்துவமனையில்: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 8 Dec 2018 3:45 AM IST (Updated: 8 Dec 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

திண்டுக்கல், 

அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைபெறும் நோயாளிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, பிரசவம் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளின் உறவினர்களிடம் ரூ.2 ஆயிரம் வீதம் பணம் வாங்குவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, நேற்று மாநிலம் முழுவதும் முக்கியமான அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அதன்படி, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், ரூபா கீதாராணி, ரூபா உள்பட 12 பேர் அடங்கிய குழுவினர் நேற்று மதியம் 11.30 மணிக்கு வந்தனர். பிரசவம் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்குள் சென்ற அவர்கள் அங்கிருந்த ஆவணங்களை சோதனை செய்தனர். பின்னர், அங்கு பணியாற்றும் செவிலியர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், லஞ்சம் வாங்கப்படுகிறதா? என்று நோயாளிகளிடமும் கேட்டறிந்தனர். இதையடுத்து, அரசு மருத்துவமனைக்குள் உள்ள பிணவறைக்கு சென்றனர். அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், ஆவணங்களையும் சோதனை செய்தனர். சுமார் 4 மணி நேரம் நடந்த சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story