காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்டினால் எதிர்ப்போம்; முதல் அமைச்சர் நாராயணசாமி பேட்டி


காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்டினால் எதிர்ப்போம்; முதல் அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 8 Dec 2018 5:15 AM IST (Updated: 8 Dec 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணையை கட்டினால் எதிர்ப்போம் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

காரைக்கால்,

கர்நாடக அரசு மேகதாதுவில் கட்டப்போகும் புதிய அணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அணையை கட்ட அனுமதி வழங்கிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் காரைக்காலில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து நேற்று கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட தபால் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். இதில் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர் நாஜிம், முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, விவசாயிகள் சங்க தலைவர் ராஜேந்திரன், பா.ம.க. மாவட்ட செயலாளர் தேவமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் வின்சென்ட், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மதியழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி செந்தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பாஸ்கர், சந்திரமோகன், சோழ சிங்கராயர், சிவகணேஷ், அரசன் மற்றும் அனைத்து கட்சியினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசும் போது கூறியதாவது:-

கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மூலம் முதல் கட்ட அனுமதியை பெற்றுள்ளது. மத்திய அரசின் இந்த அனுமதியை கண்டிக்கும் வகையில் காரைக்காலில் காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிதாக எங்கு அணையை கட்டினாலும் புதுச்சேரி அரசு கடுமையாக எதிர்க்கும். உச்சநீதிமன்றம், காவிரி நதி நீர் செல்லும் எந்த பகுதியிலும் புதிய அணைகள் கட்டக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறது.

காரைக்கால் விவசாயிகளின் உயிர் நாடி காவிரி நதி நீர் தான், அது இல்லாவிட்டால் விவசாயம் பொய்த்து போய் விடும். எனவே வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) புதுச்சேரி சட்டமன்றத்தை கூட்டி, மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக காரைக்கால் பழைய ரெயில்வே நிலையம் அருகில் தொடங்கிய ஊர்வலத்தை புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாரதியார் வீதி வழியாக சென்ற ஊர்வலம் மாவட்ட தபால் நிலையம் எதிரில் முடிவடைந்தது.

Next Story