மேகதாது அணை விவகாரம்: புதுச்சேரி சட்டசபை 14–ந்தேதி கூடுகிறது - அதிகாரப்பூர்வ அறிவிப்பு


மேகதாது அணை விவகாரம்: புதுச்சேரி சட்டசபை 14–ந்தேதி கூடுகிறது - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Dec 2018 5:00 AM IST (Updated: 8 Dec 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணை கட்டுவது தொடர்பான வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றுவதற்காக புதுவை சட்டசபை வருகிற 14–ந்தேதி கூடுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு தமிழகம், புதுவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அரசியல் கட்சிகளும், விவசாய சங்கத்தினரும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக சட்டசபை நேற்று முன்தினம் கூட்டப்பட்டு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து புதுவையிலும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கடிதம் கொடுத்து வலியுறுத்தின. ஆனால் சட்டசபையை கூட்டுவது தொடர்பான அறிவிப்பு வராததால் சபாநாயகர் அலுவலகத்தில் அந்த கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து முதல்–அமைச்சரை தொடர்புகொண்டு பேசிய சபாநாயகர் வைத்திலிங்கம் அடுத்த வாரம் சட்டசபையை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து புதுவை சட்டசபை வருகிற 14–ந்தேதி கூடுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் பிறப்பித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிவிப்பில் புதுவை சட்டசபை வருகிற 14–ந்தேதி காலை 10 மணிக்கு கூடுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில், மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்தும், இதுதொடர்பான வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் அனுமதியை திரும்பப்பெறக்கோரியும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.


Next Story