என்ஜினீயர் கொலையை தெரிவிக்காமல் இருக்க ரூ.50 லட்சம் பேரம் பேசிய 3 பேர் கைது


என்ஜினீயர் கொலையை தெரிவிக்காமல் இருக்க ரூ.50 லட்சம் பேரம் பேசிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 Dec 2018 10:00 PM GMT (Updated: 7 Dec 2018 8:33 PM GMT)

என்ஜினீயர் கொலை செய்யப்பட்டதை போலீசுக்கு தெரிவிக்காமல் இருக்க ரூ.50 லட்சம் பேரம் பேசிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சேலம், 

சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் என்ஜினீயர் வினோத்குமார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாததால் அன்னதானப்பட்டி போலீசார் இந்த வழக்கை முடித்துவிட்டனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொன்னம்மாபேட்டையை சேர்ந்த ஓட்டல் அதிபர் கோபி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக அவருடைய நண்பர் திருமணிகண்டன் மற்றும் ஏழுமலை, தங்கராஜ்(வயது 28), கிச்சிப்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன்(27), பூபாலன்(26) உள்பட சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான், திருமணிகண்டன் கூலிப்படையை ஏவி என்ஜினீயர் வினோத்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து என்ஜினீயர் கொலை வழக்கில் திருமணிகண்டன், கூலிப்படை தலைவன் சதீஷ்குமார் ஆகியோரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக காமேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். சமீபத்தில் திருமணிகண்டனை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவரிடம், என்ஜினீயர் வினோத்குமார் கொலை செய்தது தொடர்பாக போலீசில் தெரிவிக்காமல் இருக்க ரூ.50 லட்சம் தரவேண்டும் என்று தங்கராஜ், மணிகண்டன், பூபாலன் ஆகியோர் பேரம் பேசி மிரட்டியது தெரியவந்தது.

இந்தநிலையில், என்ஜினீயர் கொலை குறித்து போலீசாருக்கு சொல்லாமல் மறைத்ததற்காக பொன்னம்மாபேட்டையை சேர்ந்த தங்கராஜ், மணிகண்டன், பூபாலன் ஆகியோரை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story