காவிரியில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி பேட்டி
காவிரியில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்று பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
கரூர்,
கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கரூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, மாநில துணை பொது செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் பாபு வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர்கள் கண்ணன் (மேற்கு), முருகன் (கிழக்கு) முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், கஜா புயலின் தாக்கத்தால் குளித்தலை, கடவூர், பாலவிடுதி உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பழைய நிலைமைக்கு திரும்ப உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு ஏக்கருக்கு ரூ.5 லட்சம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், தாந்தோன்றி ஒன்றிய செயலாளர் ரவி மற்றும் சங்கர் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். உச்சநீதிமன்றம் மூலம் முனைப்புடன் செயல்பட்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது காவிரியில் மணல் கொள்ளை அதிகமாக இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே நீர்மேலாண்மையை கையாளும் பொருட்டு காவிரியில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். மஞ்சள், வெற்றிலை, கரும்பு உள்ளிட்டவற்றுக்கு கட்டுப்படியான விலையை அறிவிக்க வேண்டும். கரும்புக்கான ரூ.2 ஆயிரம் கோடி நிலுவைத்தொகை வழங்கப்படாததால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை விரைந்து வழங்கிட வேண்டும்.
கரூர் நகரில் ராஜவாய்க்கால், சணபிரட்டி வாய்க்கால் உள்ளிட்டவற்றை தூர்வாரி கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கஜா புயல் நிவாரணத்தை முழுமையாக மத்திய அரசு தர வேண்டும். அப்போது தான் மக்களை இயல்பு நிலைக்கு விரைவில் கொண்டு வரலாம். பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தலைமை செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் வராது. மாநில அரசும் அதை விரும்பவில்லை. எனவே பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்
Related Tags :
Next Story