கோரிக்கைகளை வலியுறுத்தி: ஜெயலலிதா சிலைக்கு மனு அளித்து போராட்டம் நடத்திய 2 பேர் கைது


கோரிக்கைகளை வலியுறுத்தி: ஜெயலலிதா சிலைக்கு மனு அளித்து போராட்டம் நடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 Dec 2018 10:00 PM GMT (Updated: 7 Dec 2018 9:33 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயலலிதா சிலைக்கு மனு அளித்து போராட்டம் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை, 

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் என்ற தேசிய மாணவர் அமைப்பை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மதியம் கோவை அவினாசி ரோட்டில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிலை அருகே வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த இரும்பு படிக்கெட்டில் ஏறி ஜெயலலிதா சிலை அருகே சென்று சிலைக்கு மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் தலைமை தாங்கினார். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:- கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை முதல் துணைவேந்தர் நியமனம் வரை வெளிப்படையாக நடைபெற வேண்டும். கல்லூரிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் இலவச பஸ் பாஸ் இதுவரை வழங்கப்படவில்லை. இதனை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேராசிரியை நிர்மலா தேவி போன்றவர்களால் மாணவிகள் சுதந்திரமாக கல்வி கற்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதுபோன்று செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் மட்டும் உயர்கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்கள் பலர் தற்கொலை செய்து உள்ளனர். அவர்களின் மரணம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நாங்கள் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு சென்று மனு அளித்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த போராட்டம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்றிருந்த அ.தி.மு.க. தொண்டர்களும் ஓடிவந்தனர். அவர்களை பார்த்ததும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2 பேர் மட்டுமே சிக்கினர். அவர்களில் ஒருவர் சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார். அவரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்றனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அனுமதியின்றி ஜெயலலிதா சிலை அருகே சென்று மனு அளிக்கும் போராட்டம் நடத்தியதாக அந்த 2 பேரையும் போலீசார் கைதுசெய்தனர்.

Next Story