ஆம்புலன்ஸ் விமானத்தில் சிவக்குமார சுவாமி சென்னை அழைத்து செல்லப்பட்டார் அறுவை சிகிச்சை செய்ய முடிவு


ஆம்புலன்ஸ் விமானத்தில் சிவக்குமார சுவாமி சென்னை அழைத்து செல்லப்பட்டார் அறுவை சிகிச்சை செய்ய முடிவு
x
தினத்தந்தி 8 Dec 2018 4:30 AM IST (Updated: 8 Dec 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து ஆம்புலன்ஸ் விமானம் மூலம் 111 வயதான சிவக்குமார சுவாமி சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பெங்களூரு, 

உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து ஆம்புலன்ஸ் விமானம் மூலம் 111 வயதான சிவக்குமார சுவாமி சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

111 வயதான சிவக்குமார சுவாமி

துமகூரு சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி. அவருக்கு 111 வயதாகிறது. கர்நாடகத்தில் அவர் ‘நடமாடும் கடவுள்’ என்று மக்களால் போற்றப்படுகிறார். வயோதிகம் காரணமாக அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது.

பித்தநாள குழாயில் அடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு அந்த அடைப்புகள் நீக்கப்பட்டு 11 ‘ஸ்டென்ட்’ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

பழுதடைந்த கருவிகளை...

உடனடியாக அவரை பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள், அவருக்கு ஏற்கனவே பொருத்தப்பட்ட கருவிகளில் 2 ‘ஸ்ெடன்ட்’ கருவிகள் பழுதடைந்து இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து டாக்டர்கள் அந்த பழுதடைந்த கருவிகளை நீக்கிவிட்டு, புதிதாக 2 ‘ஸ்டென்ட்’ கருவிகளை பொருத்தினர். இதையடுத்து சிவக்குமார சுவாமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

கடினமான பணி

இதையடுத்து அவர் மடத்திற்கு திரும்பி தனது வழக்கமான பூஜைகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு அவருக்கு மீண்டும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பெங்களூரு தனியார் மருத்துவமனை டாக்டர்கள் விரைந்து சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது.

அவருக்கு பொருத்தப்பட்டுள்ள ‘ஸ்டென்ட்’ கருவிகளை மாற்ற வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது. ஆனால் ஏற்கனவே 11 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால், புதிய கருவிகளை பொருத்த இயலாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே உள்ள அந்த கருவிகளை அகற்றுவதும் கடினமான பணி என்றும் டாக்டர்கள் கூறினர்.

சென்னை அழைத்துச்செல்லப்பட்டார்

இந்த நிலையில் சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனை டாக்டர்கள் நேற்று முன்தினம் துமகூரு வந்து மடாதிபதியின் உடல் நிலையை சோதனை செய்து பார்த்தனர். அவரை சென்னைக்கு அனுப்பும்படி அந்த டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இந்த நிலையில் சிவக்குமார சுவாமி நேற்று சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதற்காக அவர், ஆம்புலன்ஸ் வாகனத்தில் துமகூருவில் இருந்து எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு பகல் 12 மணியளவில் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் விமானத்தில் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

செலவை அரசு ஏற்கும்

சிவக்குமார சுவாமி அங்குள்ள ரேலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை செலவுகள் அனைத்தையும் கர்நாடக அரசே ஏற்கும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.

சிவக்குமார சுவாமி சென்னை செல்வதற்கு முன்பு அவரை கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆசி பெற்றார். ரேலா மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story