இளநீர் கடைக்காரரிடம்: மாமூல் வாங்கிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம் - கமிஷனர் அதிரடி நடவடிக்கை
கோவையில் இளநீர் கடைக்காரரிடம் மாமூல் வாங்கிய போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.
கோவை,
கோவை மாநகர பகுதியில் முக்கிய ரோடுகளின் ஓரத்தில் ஏராளமான தள்ளுவண்டி கடைகள் உள்ளன. அதுபோன்று ஆங்காங்கே ரோட்டின் ஓரத்தில் இளநீர் கடை, பழ ஜூஸ் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் அந்தந்த பகுதியை சேர்ந்த போலீசார் தினமும் பணம் வாங்கி செல்வதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருபவர் விஜயானந்த். இவர் கோவை-திருச்சி ரோட்டில் உள்ள சுங்கம் ரவுண்டானா அருகே ரோட்டின் ஓரத்தில் இளநீர் கடை வைத்து இருப்பவரிடம் மாமூல் வாங்கும் வீடியோ முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பரவியது.
இந்த வீடியோவை பார்த்த போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர் விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அத்துடன் அவர் போலீஸ்காரர் விஜயானந்தை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கையை போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் அந்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து போலீஸ் கமிஷனர் சுமித் சரண் கூறும்போது, ‘ரோட்டின் ஓரத்தில் கடை நடத்தி வருபவரிடம் மாமூல் வாங்குவது தவறு ஆகும். இணையதளத்தில் வெளியான அந்த காட்சியை பலர் பார்த்து உள்ளனர். இதனால் போலீசார் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தகர்ந்து போகும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த செயலில் ஈடுபட்ட போலீஸ்காரர் விஜயானந்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
எனவே போலீஸ்காரர்கள் மாமூல் வாங்குவது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
Related Tags :
Next Story