காரில் சென்ற போது பரிதாபம் வாகனம் மோதி 3 வாலிபர்கள் பலி பத்ராவதியை சேர்ந்தவர்கள்
துமகூரு அருகே காரில் சென்ற போது வாகனம் மோதியதில் 3 வாலிபர்கள் பலியானார்கள். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
துமகூரு,
துமகூரு அருகே காரில் சென்ற போது வாகனம் மோதியதில் 3 வாலிபர்கள் பலியானார்கள். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இவர்கள் அனைவரும் பத்ராவதியை சேர்ந்தவர்கள் ஆவர்.
3 வாலிபர்கள் சாவு
துமகூரு மாவட்டம் திப்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாடிஹள்ளி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் வந்த ஒரு வாகனம், கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. வாகனம் மோதியதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொரு வாலிபர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
இதுபற்றி அறிந்ததும் திப்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பத்ராவதியை சேர்ந்தவர்கள்
போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியை சேர்ந்த கிரீஸ்(வயது 23), யோகிஷ்(25), பிரவீன்(24) என்றும், படுகாயம் அடைந்தவர் மஞ்சுநாத் என்பதும் தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் வேலை தொடர்பாக பெங்களூருவுக்கு வந்துவிட்டு காரில் பத்ராவதிக்கு புறப்பட்டு சென்றபோது விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து திப்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கு காரணமான வாகனத்தின் டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story