பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும் - விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்து கலெக்டர் பேச்சு


பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும் - விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்து கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 8 Dec 2018 4:30 AM IST (Updated: 8 Dec 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று திருப்பூரில் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்து கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பேசினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று காலை திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு துணிப்பைகளை வழங்கி ஊர்வலத்தை தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்றும் வகையில் ஒருமுறை பயன்பாடு மற்றும் பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டின் மீது தடை வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது முழுமையாக தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது தொடர்பாக பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் சுற்றுப்புறச்சூழல் சீர்கேடு அடைவது குறித்தும், மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய், மலட்டுத்தன்மை, ஹார்மோன் சுரப்பில் சமச்சீர் இன்மை மற்றும் உடல்நலக்குறைவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அனைவரும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை உபயோகப்படுத்த வேண்டும். முழுமையாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து நிலம், நீர் மற்றும் காற்று என இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் தலைமையில் மாணவ-மாணவிகள் ஏற்றுக்கொண்டனர். திருப்பூர் எம்.பி. சத்தியபாமா, தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். திருப்பூர் ரெயில் நிலையம், டவுன்ஹால், குமரன் சாலை வழியாக வந்த ஊர்வலம் திருப்பூர் மாநகராட்சியில் நிறைவடைந்தது. பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ-மாணவிகள் கைகளில் ஏந்தியபடி சென்றனர். ஊர்வலத்தில் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவ-மாணவிகள், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர்.

இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்(திருப்பூர் தெற்கு) செல்வவிநாயகம், உதவி பொறியாளர் உதயகுமார், திருப்பூர் வடக்கு தாசில்தார் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.



Next Story