தாராபுரத்தில் பட்டப்பகலில் துணிகரம்: 2 வீடுகளின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருட்டு - மர்ம ஆசாமிகள் கைவரிசை


தாராபுரத்தில் பட்டப்பகலில் துணிகரம்: 2 வீடுகளின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருட்டு - மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 8 Dec 2018 5:00 AM IST (Updated: 8 Dec 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

பட்டப்பகலில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து 50 பவுன் நகை, பணம், பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.

தாராபுரம்,

தாராபுரத்தில் பட்டப்பகலில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து 50 பவுன் நகை, பணம், பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தாராபுரம் எல்லீஸ் நகரை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 46) விவசாயி. இவரது மனைவி செல்வமதி. வீராட்சிமங்கலத்தில் உள்ள ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். நேற்று செல்வமதியும், அவருடைய குழந்தைகளும் பள்ளிக்குச் சென்றுவிட்டனர்.

தியாகராஜன் மதியம் 1 மணி வரை வீட்டில் இருந்துள்ளார். அதன் பிறகு வீராட்சிமங்கலத்தில் உள்ள தோட்டத்திற்குச் சென்றுவிட்டார். மாலை 5 மணி அளவில் அனைவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் வைத்திருந்த இரும்பு பீரோவை, மர்ம நபர்கள் உடைத்து அதில் வைத்திருந்த 46 பவுன் நகைகளையும், 6 வெள்ளி குவளைகள், ரூ.35 ஆயிரம், வரவேற்பறையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 50 இன்ஞ் அளவுள்ள தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

அதேபோல் தாராபுரத்தை அடுத்த முண்டுவேலாம்பட்டி, ஓட்டமடத்தோட்டத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (65) விவசாயி. இவரது மனைவி பானுமதி. இவர்கள் இருவரும் நேற்று அருகே உள்ள தோட்டத்திற்கு சென்றுவிட்டு, மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவை மர்ம நபர்கள் உடைத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிறகு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகையும், வரவேற்பு அறையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்ததும் தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்மணி, இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பொன்னுசாமி வீட்டிற்கு அருகே மதிய வேளையில், கார் ஒன்று நின்று கொண்டிருந்ததாகவும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்துவிட்டு, பொன்னுசாமியின் வீட்டிற்கு விருந்தினர் யாராவது வந்திருக்கலாம் என நினைத்து, காரில் வந்தவர்களை விசாரிக்க தவறிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

பட்டப்பகலில் நகர் பகுதியிலும், கிராம புறத்திலும் அடுத்தடுத்து திருட்டு நடந்திருப்பதால், காரில் வந்த மர்ம ஆசாமிகள் தான் அந்த 2 வீடுகளிலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த துணிகர திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெள்ளை நிறக்காரை பயன்படுத்தியதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பட்டப்பகலில் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் திருட்டு நடைபெற்று வருவதால், பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.



Next Story