நோயாளிகளிடம் லஞ்சம் வாங்குவதாக புகார்; கடலூர் அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை


நோயாளிகளிடம் லஞ்சம் வாங்குவதாக புகார்; கடலூர் அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 7 Dec 2018 10:00 PM GMT (Updated: 7 Dec 2018 10:23 PM GMT)

கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

கடலூர், 

கடலூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரசவத்துக்காவும், சிகிச்சைக்காகவும் ஏழை, எளிய மக்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் இவர்களிடம் மருத்துவமனை ஊழியர்கள் கட்டாயப்படுத்தி லஞ்சம் வாங்குவதாக புகார்கள் சென்றன. அதிலும் பிரசவ வார்டில் அனுமதிக்கப்படும் பெண்களுக்கு ஆண்குழந்தை பிறந்தால் ஆயிரம் ரூபாய் என்றும், பெண் குழந்தை பிறந்தால் 500 ரூபாயும் மருத்துவமனை ஊழியர்கள் வசூல் வேட்டையே நடத்தி வருகிறார்களாம்.

இது பற்றி விசாரணை நடத்துமாறு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக கடலூர் அரசு மருத்துவமனையை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் துணை கலெக்டர் பானுகோவன் முன்னிலையில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின் ராஜசிங் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், திருவேங்கடம், மாலா, சண்முகம் மற்றும் 8 போலீசார் அடங்கிய குழுவினர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினார்கள்.

மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு, எக்ஸ்ரே மையம், சி.டி.ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் மையம் ஆகியவற்றை போலீசார் தங்களின் சோதனை வளையத்துக்குள் கொண்டு வந்து சோதனை நடத்தினார்கள்.

பின்னர் ஸ்கேன் எடுக்க எவ்வளவு கட்டணம் செலுத்தினீர்கள்? என்று நோயாளிகளிடம் விசாரித்தனர். ஸ்கேன் மையத்தில் இருந்த பணம் எவ்வளவு, ரசீது படி எவ்வளவு பணம் இருக்க வேண்டும்? கூடுதலாக கணக்கில் வராத பணம் எவ்வளவு உள்ளது? என்ற விவரங்களையும் சேகரித்தனர். இது தொடர்பாக ஸ்கேன் மைய ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இதேபோல் பிரசவ வார்டில் இருந்த ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். அந்த வார்டில் இருந்த கணக்கில் வராத பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் நோயாளிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள உதவித்தொகை சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் போலீசார் சோதனை செய்தனர். அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதனால் உதவித்தொகை பெற்ற பயனாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இந்த சோதனையால் மருத்துவமனை ஊழியர்களிடமும், நோயாளிகளிடமும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சோதனை இரவு 7.30 மணி அளவில் முடிவடைந்தது. இதில் கணக்கில் வராத பணம் ரூ.6 ஆயிரம் மற்றும் உதவித்தொகை தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிகிறது.

கடலூர் அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனைக்கு நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் அடிக்கடி சோதனை நடத்தினால் அரசு மருத்துவமனையில் லஞ்சத்தை ஒழித்து விடலாம் என்று பொதுமக்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். 

Next Story