மத்திய மந்திரி நிதின் கட்கரி மயங்கி விழுந்தார் பட்டமளிப்பு விழா மேடையில் பரபரப்பு
பட்டமளிப்பு விழா மேடையில் மத்திய மந்திரி நிதின் கட்கரி மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அகமதுநகர்,
பட்டமளிப்பு விழா மேடையில் மத்திய மந்திரி நிதின் கட்கரி மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மயங்கினார்
அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி நிதின் கட்கரி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அப்போது நிதின் கட்கரி திடீரென மயங்கி சரிந்தார். அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்டோர் அவரை தாங்கி பிடித்தனர். பின்னர் இருக்கையில் அமர வைத்து ஆசுவாசப்படுத்தினர்.
மூச்சுத்திணறல்
அங்கு இருந்த மருத்துவ குழுவினர் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில் நிதின் கட்கரி மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்கு திரும்பினார். 10 நிமிடத்துக்கு பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேடையில் நிதின் கட்கரி மயங்கி விழுந்ததால் பட்டமளிப்பு விழா அரங்கத்தில் பரபரப்பு நிலவியது.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘பட்டமளிப்பு விழா நடந்த அரங்கத்தில் காற்றின் இறுக்கம் காரணமாக பிராணவாயு (ஆக்சிஜன்) குறைவாக இருந்தது. மேலும் பட்டமளிப்பு அங்கி அணிந்து இருந்தது மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது. இப்போது எந்த பிரச்சினையும் இல்லை’ என்றார்.
சர்க்கரை அளவு
இது குறித்து நிதின் கட்கரி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘தனக்கு சர்க்கரை அளவு குறைந்ததன் காரணமாக மயங்கினேன். டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர். தற்போது தான் நலமுடன் இருக்கிறேன். இந்த நேரத்தில் என்னுடைய நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்’’ என குறிப்பிட்டு இருந்தார்.
Related Tags :
Next Story