விருத்தாசலம் அருகே: டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்


விருத்தாசலம் அருகே: டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2018 10:00 PM GMT (Updated: 7 Dec 2018 10:32 PM GMT)

விருத்தாசலம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தினர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே சின்னப்பரூர்-பரூர் சாலையில் தனிநபர் இடத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடை அமைக்க ஏற்பாடு செய்ததில் இருந்தே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டம் நடத்தினார்கள். ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

சின்னப்பரூரில் இருந்து பரூருக்கு சென்றுதான் பொதுமக்கள் பஸ்களில் வெளியூர்களுக்கு செல்ல முடியும். மேலும் சின்னப்பரூர் மாணவர்களும் பரூரில் அமைந்துள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதனால் டாஸ்மாக் கடை வழியாகத்தான் பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சென்று வருகிறார்கள்.

டாஸ்மாக் கடையில் மதுவாங்கி குடிக்கும் மதுபிரியர்கள், போதை தலைக்கு ஏறியதும் ஆங்காங்கே அலங்கோலமாக கிடப்பதும், ஆபாசமாக திட்டுவதும் பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது. அதுமட்டுமின்றி அந்த வழியாக நடந்து செல்லும் மாணவிகளையும், பெண்களையும் மதுபிரியர்கள் கேலி செய்கிறார்கள். இதனால் அங்கு அடிக்கடி தகராறு நடக்கிறது. இது குறித்து மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், சப்- கலெக்டர், தாசில்தார், கலால் தாசில்தார் ஆகியோரிடம் மனு கொடுத்தும், டாஸ்மாக் கடையை மூடவில்லை.

இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு டாஸ்மாக் கடைக்கு வந்தனர். அவர்கள் திடீரென டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள், கடையை மூடக்கோரி கோஷமிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மங்கலம்பேட்டை போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகர் விரைந்து வந்து, போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், டாஸ்மாக் கடை பிரச்சினை தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் செல்போனில் தகவல் தெரிவித்தனர்.

மேலும், சப்-கலெக்டர் பிரசாந்திடம், உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் செல்போனில் பேசினார். அதன் பின்னர் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், இங்கு நடந்த பிரச்சினை பற்றியும், டாஸ்மாக் கடையை மூடுவது தொடர்பாகவும் பேசினேன். அதற்கு சப்-கலெக்டர், டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்றார். இதனை ஏற்ற பெண்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பெண்கள் போராட்டத்தால் அந்த டாஸ்மாக் கடை நேற்று முழுவதும் திறக்கவில்லை. 

Next Story