மும்பையில் தாதா டி.கே.ராவ் கூட்டாளி படுகொலை நாமக்கல்லை சேர்ந்தவர்
மும்பையில் தாதா டி.கே.ராவின் கூட்டாளியை வீடு புகுந்து 2 பேர் படுகொலை செய்தனர்.
மும்பை,
மும்பையில் தாதா டி.கே.ராவின் கூட்டாளியை வீடு புகுந்து 2 பேர் படுகொலை செய்தனர்.
வீடு புகுந்து கொலை
மும்பை சயான் கோலிவாடா கோக்ரி அகார் பகுதியில் உள்ள சூர்யநிவாஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்தவர் மாரிமுத்து என்கிற டி.பி.ராஜா (வயது40). இவர் மும்பையை சேர்ந்த பிரபல தாதா டி.கே.ராவின் கூட்டாளி ஆவார். டி.பி.ராஜா மீது வங்கிக்கொள்ளை உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மோக்கா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அவர், 3 ஆண்டுக்கு முன் வெளியே வந்தார்.
இந்தநிலையில், நேற்று பிற்பகல் 3 மணியளவில் டி.பி.ராஜா வீட்டில் இருந்தார். அப்போது, வீட்டுக்குள் புகுந்த 2 பேர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார்கள். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சிறிது நேரத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்துபோனார்.
கொலையாளிகள் இருவரும் ரத்தக்கறையுடன் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதைப்பார்த்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீஸ் விசாரணை
இதுபற்றி அவர்கள் வடலா டி.டி. போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டி.பி.ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சயான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டி.பி.ராஜாவை கொன்ற கொலையாளிகள் யார்? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. கொலையாளிகளை அடையாளம் காண்பதற்காக போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கொலையான டி.பி. ராஜாவின் சொந்த ஊர் தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டம் ஊஞ்சனை பகுதி ஆகும்.
Related Tags :
Next Story