முதல்-மந்திரி பதவி விலக கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் துலேயில் பரபரப்பு


முதல்-மந்திரி பதவி விலக கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் துலேயில் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Dec 2018 11:23 PM GMT (Updated: 7 Dec 2018 11:23 PM GMT)

முதல்-மந்திரி பதவி விலக கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் துலேயில் பரபரப்பை ஏற்படுத்தியது.

துலே, 

முதல்-மந்திரி பதவி விலக கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் துலேயில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விவசாயி தற்கொலை

துலேவை சேர்ந்த விவசாயி நரேந்திர பாட்டீல். இவரது தந்தை தர்மா பாட்டீல். இவருடைய நிலத்தை அரசு சோலார் மின் திட்டத்துக்காக கையகப்படுத்தியது. இதற்கு நிவாரணமாக கோடிக்கணக்கில் தருவதாக தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நிவாரணமாக வெறும் ரூ.4 லட்சம் மட்டுமே கொடுத்து உள்ளது.

இதனால் விரக்திக்குள்ளான தர்மா பாட்டீல் கடந்த ஜனவரி மாதம் மராட்டிய தலைமை செயலகமான மந்திராலயாவில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை மிரட்டல்

இந்தநிலையில், அந்த நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு தர்மா பாட்டீலின் மகன் நரேந்திர பாட்டீல் அரசிடம் விண்ணப்பித்தார். துலே வந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடமும் அவர் மனு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் அவருக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சல் அடைந்தார். இந்தநிலையில் அவர் முதல்-மந்திரி உள்பட பல மந்திரிகளுக்கு தான் தற்கொலை செய்யப்போவதாக இ-மெயில் அனுப்பியுள்ளார்.

இதன்படி நேற்று அங்குள்ள 500 அடி உயர செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்று கீழே குதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் செல்போன் கோபுரம் உள்ள பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

போலீசார் அங்கு விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர் கீழே இறங்கி வரமறுத்துவிட்டார்.

ராஜினாமா செய்யவேண்டும்

இதற்கிடையே அங்கு செய்தி சேகரிக்க வந்த மராத்தி செய்தி சேனல் ஒன்றின் நிருபர் செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நரேந்திர பாட்டீல் கூறியதாவது:-

மாநில பா.ஜனதா அரசு, விவசாயிகள் பிரச்சினையில் நாடகம் ஆடுகிறது. எனது தந்தை உயிரிழந்து ஒரு வருடம் ஆகியும் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. எனவே இந்த அரசு மீது எனக்கு நம்பிக்கை இல்லை. முதல்-மந்திரி ராஜினாமா செய்தால் தான் தற்கொலை முயற்சியை கைவிடுவேன். இல்லையெனில் கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேச்சுவார்த்தை

இது தொடர்பாக மந்திரி கிரிஷ் மகாஜனை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நரேந்திர பாட்டீல் தற்கொலை முயற்சியை கைவிட வேண்டும். அவருக்கான இழப்பீடு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இதற்கிடையே அரசு, அதிகாரிகள் அங்கு சென்று நரேந்திர பாட்டீலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story