பாணாவரம் அருகே பள்ளியின் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
பாணாவரம் அருகே அரசு பள்ளியின் பூட்டைஉடைத்து கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்டவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பனப்பாக்கம்,
பாணாவரத்தை அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த சுமார் 160 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆற்காட்டை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி மாலை வழக்கம்போல் பள்ளி வகுப்புகள் முடிந்தவுடன் தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி தனது அறையையும், பள்ளியையும் பூட்டிவிட்டு ஆற்காட்டில் உள்ள வீட்டுக்கு சென்றார்.
நேற்று முன்தினம் காலை பள்ளியை திறக்க வந்த ராமமூர்த்தி பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றபோது அந்த அறையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த கம்ப்யூட்டர், லேப்டாப், மோடம், டி.வி.டி. டிரைவ் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். மேலும் அருகில் இருந்த ஆய்வுக்கூடத்தின் பூட்டையும் மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று அங்கு ஏதாவது உள்ளதா? என்று தேடி பார்த்து உள்ளனர். அங்கு எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் அங்கிருந்த பொருட்களை அவர்கள் கலைத்துவிட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து ராமமூர்த்தி நேற்று பாணாவரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story